திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்: கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதியது.

நினைக்க முக்தித் தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் அமைந்துள்ளது அண்ணாமலையார் திருக்கோயில். திருவண்ணாமலையில் இறைவனே கிரி வடிவில் எழுந்து அருள்பாலிப்பதால்,  மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.41  மணிக்கு தொடங்கி, இன்று நள்ளிரவு 12.48  மணிக்கு நிறைவடைகிறது.

அதையொட்டி,  அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தது. உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம்  அலைமோதியது. அதனால், கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது. அதனால், அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் கூட்டம் அலைமோதியது. அதையொட்டி, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவு 9 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. அதைத்தொடர்ந்து, விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தொலைவும் பக்தர்களால் நிறைந்திருந்தது. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும், இன்று நள்ளிரவு 12.48 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதாலும், ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும் இரண்டாவது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகையால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் காத்திருக்க நிழற்பந்தலுடன் இருக்கை வசதி: திருவண்ணாமலையில்  மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வதற்காக லட்சக்கணக்கான  பக்தர்கள் வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் அண்ணாமலையார் திருக்கோயிலில்  சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்ல விரும்புகின்றனர். அதனால்,  பவுர்ணமி நாட்களில் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 3 மணி நேரம்  முதல் 4 மணி நேரம் வரை தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை  ஏற்படுகிறது.

எனவே, தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக  அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் சுமார் 500 பேர் அமரும் வகையில்,  நிழற்பந்தல் அமைத்து இருக்கை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.  அதேபோல், திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பெரிய நந்தி அருகே சுமார் 500  பக்தர்கள் அமர்வதற்கான பந்தல் மற்றும் இருக்கை வசதிகளை செய்துள்ளனர்.

 

இதுகுறித்து, கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் கூறுகையில்,  ‘கடந்த சில  மாதங்களாக கிரிவல பக்தர்களுடைய எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது. எனவே,  பக்தர்களின் வசதிக்காக இதுபோன்ற நிழற்பந்தல், இருக்கை வசதிகளை சோதனை  முயற்சியில் செய்துள்ளோம். இதற்கு பக்தர்களிடையே வரவேற்பு  கிடைத்திருக்கிறது. எனவே, அடுத்தடுத்து வரும் பவுர்ணமி கிரிவலத்தின் போது  பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கூடுதலான வசதிகள் ஏற்படுத்தித்  தரப்படும்’ என்றார்.

Related Stories: