தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது

கோவை: தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த சகோதரர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை கோவில்பாளையம் அடுத்த கொண்டையம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (56). இவர், தனது மகளுக்கு வேலை தேடி வந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே குடியிருந்த 7 பேர் தங்களை அரசு அதிகாரிகள், அரசு டிரைவர்கள் என்று கூறி அறிமுகமாகி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய சந்தானகிருஷ்ணன் தனது மகளுக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கூறி கடந்த ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரை பல்வேறு தவணைகளில் ரூ.21 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த பணி நியமன ஆணையுடன் அரசு வேலைக்கு சென்றபோது அது போலி என தெரியவந்தது. இது குறித்து அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்த ஜவர் பிரசாத் (29), தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டம் நிர்மலா நகரை சேர்ந்த என்.எஸ்.சரவணக்குமார் (33), கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (33), கோவை பெரியநாயக்கன்பாளையம் சுதாகர் (37), சுரேந்திரன் (34), ஜி.சரவணக்குமார் ஆகிய 7 பேர் என தெரியவந்தது. கோவையில் உள்ள மில்லில் பணியாற்றியபோது நண்பர்களான இவர்கள் தலைமை ெசயலக அதிகாரிகள், கார் டிரைவர்கள் என்று பலரிடம் அறிமுகமாகி இந்து அறநிலையத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதில், சுதாகர், சுரேந்திரன் ஆகியோர் அண்ணன், தம்பிகள் ஆவர். இதையடுத்து, தனிப்படை போலீசார் ஓசூர், பவானி, கோவையில் பதுங்கி இருந்த ஜவகர் பிரசாத், அன்பு பிரசாத், என்.எஸ்.சரவணக்குமார், சதிஷ்குமார், சுரேந்திரன், சுதாகர் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். ஜி.சரவணக்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: