கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முடிவை ஜூலை 31-க்குள் வெளியிட வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  ‘கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், மாணவர்களுக்கான மதிப்பெண் முடிவை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்குதல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி இந்தாண்டுக்கான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்ேதர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. இதுபோன்ற சூழலில், ஆந்திர அரசு மட்டும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்களை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்தனர். கடந்த 22ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நேரடியாக தேர்வு நடத்தப்பட்டு ஒரு மாணவர் இறந்தாலும் கூட, அதற்கு மாநில அரசைதான் பொறுப்பேற்க சொல்வோம்,’ என எச்சரித்தனர். இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஹபூஸ் நாஸ்கி, ‘‘ஆந்திராவில் கொரோனா தொற்று குறைந்த பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டுதான் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விடும்,’’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘‘நீங்களாகவே ஒரு முடிவை எடுத்துக் கொள்ள வேண்டாம்,’ என கண்டித்தனர். பின்னர், ‘இது பற்றி கல்வி நிபுணர்களுடன் ஆந்திர அரசு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கலாம்,’ என்று பரிந்துரை செய்தனர். இந்த வழக்கின் இறுதியில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கொரோனா அச்சுறுத்தலால் நடப்பாண்டு 12ம் வகுப்பு மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள அனைத்து மாநிலங்களும், மாணவர்களுக்கான மதிப்பெண் முடிவை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். மேலும், தேர்வு மற்றும் அதற்கான மதிப்பெண் ஒதுக்கீட்டு முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் இன்றில் இருந்து (நேற்று) அடுத்த 10 நாட்களில் உருவாக்கி அதனை தெரிவிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.‘உயிருடன் விளையாட வேண்டாம்’இந்த வழக்கில் ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அடுத்த மாதம் இறுதிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விடும்,’ என கூறியது, நீதிபதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. நீதிபதிகள் அவரிடம், ‘‘கொரோனா பரவல் அடுத்த மாதம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அப்படி இருக்கும் போது, அடுத்த மாதம் 12ம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக விசாரணையின் போது தெரிவித்து உள்ளீர்கள். அது எப்படி சாத்தியமாகும்? அதேபோன்று, ஆகஸ்ட் மாதத்தில் உருமாறிய டெல்டா வைரசின் தாக்குதலும் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆந்திராவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு அறைக்கு 15 மாணவர்கள் என்றால் கூட, 30 ஆயிரம் அறைகள் தேவைப்படும். அதை ஆந்திர அரசால் ஏற்பாடு செய்து தர முடியுமா? கண்டிப்பாக அது சாத்தியமல்ல. அதனால், மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம்,’’ என எச்சரித்தனர்.12ம் வகுப்பு தேர்வு ரத்து: ஆந்திர அரசுஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் நேற்று இரவு அளித்த பேட்டியில், ‘12ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 நாட்களில் நடத்தி ஜூலை 31ம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்வுகளை நடத்தி, முடிவை அறிவிக்க 45 நாட்கள் தேவைப்படும். இந்த சூழ்நிலையில் தேர்வை நடத்த முடியாது. எனவே, 2020-2021ம் ஆண்டுக்கான 12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது,’’ என்றார்….

The post கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முடிவை ஜூலை 31-க்குள் வெளியிட வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: