புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து  திமுக எம்எல்ஏக்கள் பள்ளி சீருடையில் சட்டப்பேரவைக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் முதல்வர ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசு நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் 15வது சட்டசபையின்  குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ரங்கசாமி அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை   வழங்காததை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் பள்ளி  சீருடை அணிந்து வந்து கலந்து கொண்டனர். காலை 9.30 மணிக்கு சபாநாயகர்  செல்வம் திருக்குறள் வாசித்து அவையை துவக்கி  வைத்தார். பின்னர், மறைந்த  இங்கிலாந்து ராணி எலிசபத் மறைவுக்கு இரங்கல்  குறிப்பு வாசிக்கப்பட்டு,  எம்எல்ஏக்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி  செலுத்தினர்.

அவை துவங்கியதும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும். மக்கள்   பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை இல்லை. எல்லாவற்றையும் தலைமை செயலரே   செய்வார் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதற்கு? என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா கேள்வி எழுப்பினார். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் ‘வேண்டும்...  வேண்டும்... மாநில அந்தஸ்து  வேண்டும்’ என கோஷமிட்டவாறு திமுக   எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

இவர்களுடன் காங்கிரஸ்   எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, 2022- 23ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மதிப்பீடுகளை  காட்டுகின்ற  அறிக்கையையும், 2022- 23ம் ஆண்டுகான துணை கொடைகளுக்கான  கோரிக்கைகள் அவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல்  செய்தார். இதனை குரல் வாக்கெடுப்பு  மூலம் சபாநாயகர் நிறைவேற்றினார். 9.30 மணிக்கு கூடிய சட்டசபை கூட்டம் 9.54 மணிக்கு  நிறைவடைந்தது.  

Related Stories: