ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

சென்னை: ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி ஆன்லைன் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தி, வேலைக்கு விமானத்தில் அழைத்து வந்து இளம்பெண்களை, நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த பிரபல பாலியல் புரோக்கர் கார்த்திகேயனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆன்லைன் மூலம் ஐடி நிறுவனங்களில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து, நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக அழைத்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர், பணம் சம்பாதிப்பதாக பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளனர். புகாரின்படி, நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் இளம்பெண்களை வேலைக்கு அழைத்து வந்து பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்யும் நபர்கள் யார் என்பது குறித்து, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் மற்றும் மீட்கப்பட்ட வடமாநில இளம் பெண்களிடம் விசாரணை நடத்தினர். அதில், சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜேக்கப் (எ) கார்த்திகேயன் (38) என்பவர், நணபர்கள் 3 பேருடன் இணைந்து கடந்த 9 ஆண்டுகளாக இளம்பெண்களை ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும், மாடலிங்கில் சேர்ப்பதாகவும் கூறி அவர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.

பிறகு பாலியல் கும்பலின் தலைவனான கார்த்திகேயனை கைது செய்யும் பணியில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 10 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, பாலியல் புரோக்கர் கார்த்திகேயன் நண்பர்களான இருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 9 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் ஐ- டெக் பாலியல் தொழில் நடத்தி வந்த கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க கொரட்டூருக்கு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கார்த்திகேயன் குடும்பத்தினர் தங்கியுள்ள கொரட்டூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர். பிறகு கைது செய்யப்பட்ட நண்பர்கள் கூறியபடி, கார்த்திகேயன் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வந்ததார். உடனே போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து பிரபல பாலியல் புரோக்கர் கார்த்திகேயனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது, வட மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண் பொறியாளர்கள், ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த இளம்பெண்களின் புகைப்படங்கள் இருந்தன.

பின்னர் கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் கார் டிரைவர் ஜேக்கப் (எ) கார்த்திகேயன். இவருக்கு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார் டிரைவராக பணியாற்ற வேலை கிடைத்தது. அப்போது கார்த்திகேயனுக்கு மும்பையை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் கார் டிரைவர் தொழிலை விட்டு விட்டு, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பாலியல் புரோக்கர்கள் கேட்கும் இளம்பெண்களை பிடித்து கொடுக்கும் இடைத்தரகராக மாறினார். அதில் நல்ல வருமானம் வந்ததால், கார்த்திகேயன் கடந்த 9 ஆண்டுகளாக அசைக்க முடியாத பாலியல் இடைத்தரகராக செயல்பட்டு வந்தார். கார்த்திகேயன் மீது 5 பாலியல் வழக்குகள் சென்னையில் உள்ளது. இதுபோல் பெங்களூரு, மும்பை, டெல்லியிலும் இவர் மீது வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், கார்த்திகேயன், ஆன்லைன் மூலம் தான் பிரபல ஐடி நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் மேலாளராக இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். அதன் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை, கார்த்திகேயன் ஆன்லைன் மூலமே நேர்காணல் நடத்தி அழகான படித்த பெண் பொறியாளர்களை தேர்வு செய்துள்ளார்.

அப்படி தேர்வு செய்யப்பட்ட இளம்பெண்கள், ‘தங்குவதற்கு நட்சத்திர ஓட்டலில் அறை ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவர்களை சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்துள்ளார். மேலும், ஐடி நிறுவனம் சார்பில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைப்பதாக கூறியும், பகுதி நேரத்தில் சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசைவார்த்தைகளை கூறியும் அவர்களை நம்பவைத்து பல கோணங்களில் நிர்வாண படங்கள் உள்பட பல்வேறு புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு, பிறகு அந்த புகைப்படத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அவர்களை கட்டாயப்படுத்தி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களின் பாலியல் புரோக்கர்களுக்கு வயதுக்கு ஏற்றப்படி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை பேசி விற்பனை செய்து வந்துள்ளார். அதன்படி பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட இளம்பெண்கள் வேறு வழியின்றி, பாலியல் புரோக்கர்களிடம் அடிமைகளாக ரூ.50 ஆயிரம் மாத ஊதியத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இளம்பெண்களை விலைக்கு வாங்கும் பாலியல் புரோக்கர்கள் கார்த்திகேயன் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளனர். சில பெண்கள் நட்சத்திர ஓட்டல் ஆடம்பரம் வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சில பெண்கள் சிறிது நாட்கள் பாலியல் புரோக்கர்களிடம் இருந்துவிட்டு தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் யாரும் இவர்கள் மீது புகார் அளிக்காததால் கார்த்திகேயன் தனது தொழிலை செழிப்பாக செய்து வந்துள்ளார். அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் வேலைக்கு எடுப்பதாக கேரளா, மும்பை, பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரேதேசம், ஆந்திரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களை விமானம் மூலம் அழைத்து வந்து, நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைத்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதன் மூலம் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் கார்த்திகேயனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் புகைப்படம் உறுதி செய்வதாக இருந்தது. கார்த்திகேயனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உள்ள பெண்கள் அனைவரும் சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் செல்போனில் உள்ள பெண்கள் குறித்த பட்டியலை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர். அவர்கள் தற்போது எங்குள்ளனர், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள பாலியல் புரோக்கர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.  ‘கார்த்திகேயன் தனது மனைவியிடம் தாம், நட்சத்திர ஓட்டலில் இன்று வரை கார் டிரைவராக வேலை செய்து வருவதாக கூறி நம்ப வைத்து வந்துள்ளார். பெரிய அளவில் பாலியல் தொழிலை கார்த்திகேயன் நடத்தி வந்துள்ளதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: