திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், புகைப்படக் கலைஞரின் விலை உயர்ந்த கேமராவை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் ராஜாகடை பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (55), புகைப்பட கலைஞர். இவர், நேற்று முன்தினம் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்ததால், அருகில் உள்ள நாற்காலியில் தனது விலை உயர்ந்த கேமராவை வைத்துவிட்டு, செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, கேமரா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 நபர்கள் திருமண மண்டபத்திற்குள் வந்து கேமராவை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், யானைகவுனி பகுதியில், கோமராவை திருடி சென்ற வாலிபர்கள் சுற்றித் திரிவதாக, ராயபுரம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், 2 பேரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், யானைகவுனியை சேர்ந்த ஆகாஷ் (எ) கோழி ஆகாஷ் (23), கல்யாணபுரத்தை சேர்ந்த முகேஷ் (23) ஆகிய 2 பேர் என்பதும், திருமண மண்டபத்தில் இருந்து கேமராவை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து கேமரா பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: