ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட கடந்த 31ம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் இடையீட்டு மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. பழனிசாமியின் இடையீட்டு மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று பதில் மனுவை தாக்கல் செய்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

தேர்தல் ஆணையம்:

தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து வருகிறார். உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை நாங்கள் ஏற்கிறோம். அதிமுக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டன என தெரிவித்தது. தேர்தல் ஆணையம் கூறுவதை பொறுத்தே உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இ.பி.எஸ். தரப்பு;

தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க மறுக்கிறது. ஆனால், கடந்த முறை இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, மாறுபட்ட நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது. இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால், எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற தயார் என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள்:

சமாதானம் என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை என கூறுகிறீர்கள். நாங்கள் கூறும் பரிந்துரையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இரு தரப்பும் கையெழுத்திடாமல் பொதுவான ஒருத்தரை, பொதுக்குழுவின் சார்பாக, அவைத் தலைவர் கையெழுத்திட்டால் என்ன?. வேட்பாளரை இறுதி செய்ய மட்டும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட மூவரும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை, அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்க வேண்டும். அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்க முடிவு எடுக்க வேண்டும். எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: