அம்பத்தூர்: சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னை கொரட்டூர் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (68). அதே பகுதியில் கடந்த 15 வருடங்களாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 23ம்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்றுபார்த்தபோது ரு2 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தார்.திருட்டு தொடர்பாக பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் குமார் (22), ராஜி(20) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கொரட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.