பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்: விரைந்து முடிக்க நடவடிக்கை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி-   திண்டுக்கல் இடையே நடைபெறும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அதிகரிக்கும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், விரைந்து செல்லும் வகையிலும், நெடுஞ்சாலைத்துறை மூலம் இருவழிபாதைகளை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், திருச்சி, சென்னைக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இருப்பினும், ஆங்காங்கே உள்ள நகரங்களில் ஏற்படும் வாகனபோக்குவரத்து நெருக்கடியால் குறிப்பிட்ட நேரத்தில், உரிய இடத்துக்கு சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்கும் வகையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை சுமார் 65சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, நான்கு வழி சாலையாக, சுமார் ரூ.3650 கோடியில் மேற்கொள்ளப்படும் இந்த புதிய நெடுஞ்சாலை பணிகள் நடக்கிறது. பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம் வரை, மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, ஒட்டன்சத்திரம் முதல் கமலாபுரம் வரையிலும் என மொத்தம் 132கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

 பிரதான சாலைமட்டுமின்றி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை, பழனி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சுமார் 100கிலோ மீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலையாக அமைவதால், கிராமபுறங்கள் வழியாக இப்பணி தீவிரமாக நடக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதிகளில் தேவையான மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இரு வழியாக பிரிக்கும் வகையில் ரோட்டோரங்களில் கான்கிரீட் தடுப்புகள், மையத்தடுப்பு பகுதி என அமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பல்வேறு வழியாக செல்லும் ஆறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள், ரயில்வே பாலங்கள், சிறு பாலங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது.  

முக்கிய நகரங்களின் ரோடுகளை இணைக்கும் வகையில், சுமார் 48கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் நன்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் தார்ரோடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இருப்பினும், பல்வேறு இடங்களில் சுமார் 80சதவித பணிகள் நிறைவடைந்துள்ளது. பொள்ளாச்சி பகுதியில் துவங்கும் பகுதியில் கிராமங்கள் வழியாக நெடுஞ்சாலை பணி இருப்பதால், அப்பகுதிகளில் சற்று தாமதமடைகிறது.

இதற்காக, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்ட இடங்களில் பணிகள் விரைந்து நடக்கிறது. மீதமுள்ள பகுதியிலும் ரோடு அமைக்கும் பணியை விரைவுப்படுத்தி, பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான நான்கு வழிப்பாதையிலான நெடுஞ்சாலை பணியை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: