அருப்புக்கோட்டை நகராட்சியில் காட்சிப் பொருளாக இருக்கும் ஆடுவதைக் கூடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டு காட்சிப் பொருளாக இருக்கும் ஆடுவதைக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டையில் உள்ள பந்தல்குடி ரோட்டில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இதன் எதிரே நகராட்சி ஆடுவதைக் கூடம் ரூ.20 லட்சம் செலவில் கடந்த 2008ல் கட்டி முடிக்கப்பட்டது.

இங்கு சுகாதாரமான முறையில் ஆடுகள் அறுக்க தேவையான அனைத்தும் வசதிகளும் உள்ளன. நகரில் புதுக்கடை பஜார், சொக்கலிங்கபுரம், மதுரை ரோடு என பல்வேறு இடங்களில், 30க்கும் மேற்பட்ட ஆடு இறைச்சி விற்கும் கறிக்கடைகள் உள்ளன. ஆடுகளை இறைச்சி வியாபாரிகள் நகராட்சி ஆடுவதைக் கூடத்திற்கு, ஆடுகளைக் கொண்டு வந்து நகராட்சி சுகாதார அலுவலர்கள் மேற்பார்வையில், ஆடுகளை பரிசோதனை செய்த பின்பே அறுக்க வேண்டும். இவ்வாறு அறுக்கப்பட்ட இறைச்சியின் மீது சுகாதாரமான இறைச்சி என்பதற்கு நகராட்சி முத்திரை குத்தும்.

அதன் பின்பே சுகாதாரமான முறையில், கடைகளுக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால், ஆடுவதைக் கூடம் திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆடுகள் அறுக்கப்பட்டன. அதன் யாரும் ஆடுகளை அறுக்க கடை வியாபாரிகள் வரவில்லை.

அதிக தூரத்தால் வருவதில்லை

இந்நிலையில், ஆடுவதைக் கூடம் அதிக தூரத்தில் இருப்பதாக காரணம் காட்டி, இறைச்சி வியாபாரிகள் ஆடுவதை கூடத்திற்கு ஆடுகளைக் கொண்டு வந்து வெட்டுவதில்லை. கடைகளிலேயே அறுக்கின்றனர். இவ்வாறு அறுக்கப்படும் ஆடுகள் சுகாதாரமான ஆடுகள் தானா என்பதும் தெரிவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆடுகளின் கழிவுகள் சாக்கடை கால்வாயில் கொட்டப்படுகிறது. இதனால், அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தூர்நாற்றம் தாங்கமுடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், பல ஆண்டுகளாக ஆடுவதைக் கூடம் செயல்படாமல் இருந்தது.

தனியார் பராமரிக்க டெண்டர்

இதனிடையே ஆடுவதைக் கூடத்தை மீண்டும் புதுப்பித்து, பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விட்டனர். இருப்பினும் இறைச்சி விற்பவர்கள் யாரும் இங்கு வந்து ஆடுகளை அறுக்காததால், அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. தற்போது டைல்ஸ், குழாய் ஆகியவற்றை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர். இரவு நேரங்களில் உள்ளே சென்று மது அருந்துகின்றனர். தற்போது திறந்தவெளி பாராக செயல்படுகிறது. நகராட்சி மூலம் இந்த இடத்திற்கு இரவு காவலர் பணியில் அமர்த்தியும் வேறு பணிக்கு மாற்றி விட்டுள்ளனர். மேலும், நகரில் மாட்டு இறைச்சி கடைகள் 10க்கும் மேற்பட்டவை உள்ளன.

இவற்றின் கழிவுகளை வாறுகாலில் விடுவதால், துர்நாற்றம் சுகாதாரகேடு ஏற்படுவதாகவும், எனவே, மாடுவதைக் கூடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி 10வது வார்டு கவுன்சிலர் அப்துல்ரகுமான் ஒவ்வொரு முறையும், நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறார். எனவே, ஆடுவதைக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆடுகள் வதைக்கூடத்திற்கு கொண்டு வந்து அறுக்கவும், ஆடுவதைக் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: