சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது

சூளகிரி: சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள், வாகனங்கள் மீதும், போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 30 வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கியதுடன், 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் அவர்களை விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில், எருதாட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான அனுமதி நேற்று முன்தினம் (1ம் தேதி) அரசிதழில் வெளியானது. இதையடுத்து, ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, அனைத்து துறையும் கூட்டு புல தணிக்கை செய்து, அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனிடையே, கோபசந்திரம் கிராமத்தில் எருதாட்டம் நடக்கும் இடத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராம மக்கள், கர்நாடக மாநிலம் ஆனேக்கல், அத்திப்பள்ளி, கோலார், மாலூர் போன்ற பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர், தங்களது காளைகளுடன் நேற்று அதிகாலை 5 மணிக்கே திரண்டனர்.

அப்போது, அங்கு வந்த அதிகாரிகள், ஆய்வு செய்த பிறகே விழா நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டிப்பர் லாரியை குறுக்கே நிறுத்தியும், சாலையில் ஜல்லிக்கற்களை கொட்டியும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் திரண்டதால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து  கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார், வஜ்ரா வாகனம் மற்றும் துப்பாக்கி ஏந்திய 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டர் வந்து எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே, இந்த இடத்தை விட்டு செல்வோம் என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். திடீரென சிலர் அங்கிருந்த வாகனங்கள் மீது கற்களை வீச தொடங்கினர். இதில் பஸ்கள், லாரிகள், கார், ஜீப்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பொதுமக்கள், பயணிகள் சிலரும் காயம் அடைந்தனர். போலீசார் மீதும் சரமாரியாக கற்களை வீசினர். இதில் 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். ஒரு பெண் போலீசுக்கு கால் முறிந்தது.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். அவர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அதன்பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட 300 பேரை கைது செய்து, சூளகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மறியல் மற்றும் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, நிலைமையை சுமுகமாக கையாளும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் எருதாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 2 மணி நேரம் மட்டும் எருதாட்டம் நடத்தப்பட்டது. இதனை திரளானோர் கண்டு களித்தனர்.

* மார்ச் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு, எருதாட்டம், மஞ்சுவிரட்டுக்கு தடை

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது மற்றும் அனைத்து பொங்கல் சார்ந்த விளையாட்டுகளை நடத்த கிராமங்களில் இருந்து அனுமதிகோரியிருந்தால், அதனை உடனடியாக நிராகரித்துவிட வேண்டும். அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கலவரங்கள் ஏற்படாமல் சமாளிக்க வேண்டியது டிஐஜிக்களின் கடமை. மாவட்ட எஸ்.பிக்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்து விளையாட்டுகளுக்கு அனுமதி மறுத்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் டி.ஐ.ஜிக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மார்ச் 31ம் தேதி வரை கிராமங்களில் அனைத்துவிதமான பொது விளையாட்டுகளுக்கும் அனுமதி தரக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: