தைப்பூச திருவிழா பழநியில் 26 இடங்களில் காவல் உதவி மையங்கள்

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழநியில் 26 இடங்களில் காவல்துறை சார்பில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இவ்விழா கடந்த ஜன.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவிற்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வருபவர்களுக்கு கோயிலுக்கு செல்லும் வழி, பஸ் நிலையம் செல்லும் வழி, உடன் வந்தவர்களை பிரிந்து விட்டால் கண்டுபிடித்து தருவது உள்ளிட்ட பணிகளுக்காக பழநி நகரில் 26 இடங்களில் காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

உதவி மையத்தில் 24 மணிநேரமும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வீடியோ காமிராக்கள் மூலம் நகரில் நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட உள்ளன. பாதயாத்திரையாக வரும் பக்தர்களிடம் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் தலா 2 போலீசார் வீதம் 19 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் 70க்கும் மேற்பட்ட குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 40க்கும் மேற்பட்ட மப்டி போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்ள தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: