ரூ.2 கோடி மதிப்பு நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்த முதியவர் அதிரடி கைது

அம்பத்தூர்: அயனாவரம் சிவலிங்கா ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் (62). இவருக்கு அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டில்  சொந்தமாக 4,800 சதுர அடி காலி மனை உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம்  இந்த இடத்தை விற்பதற்காக அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முதியவர் ஒருவர் வந்தார். அவர்,  தன்னுடைய பெயர் கண்ணையன் என்று கூறி சார் பதிவாளரிடம் அடையாள அட்டைகளை சமர்ப்பித்துள்ளார்.  அதை சரி பார்த்தபோது போலி என தெரியவந்தது. அதை தொடர்ந்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு முதியவரை கைது செய்தார். விசாரணையில், அம்பத்தூர் விநாயகபுரம் இந்திரா நகரை சேர்ந்த தனபால் (72). இவர், கண்ணையன் போல அடையாள அட்டை தயார் செய்து அவரது நிலத்தை விற்க முயன்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் தனபால் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: