2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

* தங்கம், வெள்ளி, வைரம், சிகரெட் வரி உயர்வு

* உள் கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

* பெண்களுக்கு புதிய சிறுசேமிப்பு திட்டம்

* தேர்தலை குறி வைத்தே அறிவிப்புகள் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வரும் 2023-24ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், எதிர்பார்த்தபடியே வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செல்போன், டிவி உதிரிபாகங்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டது. பெண்களுக்காக புதிய சிறுசேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, வைரம், சிகரெட்டுக்கான வரிகளை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டே வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி, ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கக் கூடிய 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், இதுவே ஒன்றிய பாஜ அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் ஆகும். எனவே, தேர்தலை கருத்தில் கொண்டு, பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, நீண்டகாலமாக கோரிக்கையாக இருந்து வரும் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகின.

பாரம்பரிய வழக்கப்படி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதலைப் பெற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் எதிர்பார்த்தபடியே, வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. தற்போது பழைய, புதிய என 2 விதமான வருமான வரி முறைகள் பின்பற்றப்படுகின்றன. புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கு வருமான வரிப்பிரிவு 80சி, 80டியின் கீழ் எந்த வருமான வரிச்சலுகையும் கிடைக்காது. இதில் ஏற்கனவே ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை வாங்குவோருக்கு வரி கிடையாது. தற்போது இது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதோடு, புதிய முறைக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரி விதிப்பு விகிதங்கள் 5 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வாங்குபவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்குபவர்கள் 5% வரி செலுத்த வேண்டும். ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வருமானம் ஈட்டுவோர் 10% வரி செலுத்த வேண்டும். ஆனால், ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுவர்களுக்கு பிரிவு 87ஏ-ன் படி ரூ.25,000 வரி தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.

இதன் மூலம் அவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டி இருக்காது. ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் சம்பளம் பெறுவர்களுக்கு 15 சதவீதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ.15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதமும் வரி விதிப்பதாக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை ரூ.50 ஆயிரத்திற்கான நிலையான கழிவு சலுகை ரூ.5 லட்சத்திற்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது அனைத்து சம்பளதாரர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆண்டு சம்பளம் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக வாங்குபவர்களும் ரூ.52,500க்கான நிலையான கழிவு சலுகையை பெறுவார்கள். அதே சமயம், பழைய முறைப்படி வருமான வரி செலுத்துவோருக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதைத் தவிர, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மூலதன முதலீட்டு செலவுக்கு ரூ.10 லட்சம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். பெண்களுக்கான ஒருமுறை பணம் செலுத்தும் புதிய சிறுசேமிப்பு திட்டத்தையும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த மகளிர் சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ், ஒரு பெண் அல்லது சிறுமியின் பெயரில் அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலான ஒரு தொகையை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். இதற்கு ஆண்டிற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். இத்திட்டம் 2025ம் ஆண்டு மார்ச் வரை மட்டுமே அமலில் இருக்கும்.

ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.41 லட்சம் கோடி மூலதன முதலீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் சுங்கவரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செல்போன், டிவி உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் சுங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம் தங்கம், வெள்ளிக் கட்டிகளுக்கான சுங்க வரி 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிகரெட் மீதான உற்பத்தி வரி 16 சதவீதமாகவும், மின்சார சமையலறை புகைபோக்கிகளுக்கான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை உயரும். அதே போல, காம்பவுன்ட் ரப்பர்களுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வாகன டயர்களின் விலை அதிகரிக்கலாம்.

இவைகளைத் தவிர பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள்:

* விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* நாட்டில் கடந்த 2014 முதல் புதிதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

* கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்.

* நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.

* குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

* லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.0 திட்டம் கொண்டுவரப்படும்.

* 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும்.

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியை 66 சதவீதம் உயர்த்தி ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

* நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.

* 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

* போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* செயற்கை வைரங்களுக்கு சுங்கவரி குறைக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜ, இதுவரை எந்த பட்ஜெட்டிலும், வருமான வரியில் பெரிய அளவில் சலுகை வழங்கவில்லை. தற்போது கூட 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, நடுத்தர மக்களின் ஓட்டுக்களைப் பெறவே, வருமான வரிச் சலுகையை அறிவித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

விலை எகிறும்

* தங்கம், வெள்ளி, வைர நகைகள்

* சிகரெட்டுகள்

* பேஷன் நகைகள்

* மின்சார சமையலறை புகைபோக்கி

* இறக்குமதி மிதிவண்டிகள் மற்றும் பொம்மைகள்

* இறக்குமதி சொகுசு கார்கள்

* காப்பர் ஸ்கிராப்

விலை குறையும்

* மொபைல் போன்களுக்கான பாகங்கள்

* டிவி பேனல்களுக்கான பாகங்கள்

* லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்

* மின்சார வாகனத் தொழிலுக்கான மூலப்பொருட்கள்

* சார்ஜர்கள்

* கேமரா லென்ஸ்கள்

* ஒன்றிய பாஜ அரசின் 11வது பட்ஜெட் இது.

* நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 5வது முறையாக நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதன் மூலம், மன்மோகன் சிங், அருண்ஜெட்லி, ப.சிதம்பரம், யஸ்வந்த் சின்கா, மொரார்ஜி தேசாய் ஆகியோருக்கு பிறகு தொடர்ச்சியாக 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த 6வது நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

* நிர்மலா சீதாராமன் நேற்று 87 நிமிடங்கள் பட்ஜெட் உரை நிகழ்த்தினார். இதுவே அவரது குறைந்த நேர பட்ஜெட் உரை. கடந்த ஆண்டு 92 நிமிடங்கள் பட்ஜெட் உரை நிகழ்த்தியதே குறைவான நேரமாக இருந்தது. அதிகபட்சமாக 2020ல் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் உரையாற்றினார். இதுவே இந்திய பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட நேர பட்ஜெட் உரையாகும்.

* நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் தொடக்கத்தில், ‘இது அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்’ என குறிப்பிட்டு பேசினார். நாட்டின் 75வது சுதந்திரதினம் 2022ல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த 25 ஆண்டில் 2047ல் நாடு 100வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த 25 ஆண்டு காலத்தை பிரதமர் மோடி அமிர்த காலம் என குறிப்பிட்டு வருகிறார்.

Related Stories: