தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக இன்று(01.02.2023)தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை(02.02.2023)தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்த வரையில்:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30- 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (02.02.2023) இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: