30 ஆண்டுக்கு முன் காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து தாருங்கள்-புகார் எதிரொலியால் அதிகாரிகள் அளவீடு

முத்துப்பேட்டை : நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அந்தகாலத்தில் இருந்து தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதில் கிணற்ற காணோம் என்று வடிவேல் காமெடி வந்தநாள் முதல் தமிழகத்தில் பல இடங்களில் கிணற்றை காணோம்... குளத்தை காணோம்... என்று தொடர்ச்சியாக புகார் வந்தவண்ணம் உள்ளது. மட்டுமின்றி இவைகள் மீடியாக்களில் வெளிவந்து அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற சமூக ஆர்வலர் முகமது மாலிக் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மூலம் தமிழக அரசு 540 அரசாணை வெளியான பிறகு இந்த அரசாணையை மேற்கொள்காட்டி பல இடங்களில் ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக அகற்றப்பட்டு வருகிறது.இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருவாரூர் மாவட்ட கலெக்டர், எஸ்பி, டிஆர்ஓ, ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புகார் மனு ஒன்று அனுப்பினார். அதில், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/5ல் 84 ஏர்ஸ் (2ஏக்கர்) கொண்ட சாம்பான் குளம் இப்பகுதி பொதுமக்களுக்கும், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கும் மிகவும் பயன்பட்டு வந்த நிலையில் சுமார் 30ஆண்டுகளுக்கு முன் தனியாரால் தூர்க்கப்பட்டு தற்போது குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாதளவில் உள்ளது.

 எனவே பொதுமக்களின் தேவைக்காகவும், அரசு புறம்போக்கு குளத்தினை தூர்த்து நீராதார போக்கை தடை செய்தது. பொதுமக்கள் நலனுக்கு எதிராகவும், உச்சநீதிமன்றம் நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமிப்பு செய்யகூடாது என்ற உத்தரவை மீறியும் இந்த செயல் நடைபெற்றுள்ளது. ஆகையால் காணாமல்போன இந்த சாம்பான் குளத்தை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் அந்த புகார் மனுவில் கூறிஇருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுகுறித்து தினகரனிலும் செய்தி வெளியானது. இந்த நிலையில் புகார் மனு அனுப்பியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த புகார்தாரர் சென்றவாரம் ராஜேந்திரன் மாற்றும் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர்.இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் வருவாய்த்துறை மூலம் குளத்தை கண்டுபிடித்து அளவீடு செய்து காண்பிக்கப்படும் என்று உறுதி கூறினர்.

அதன்படி நேற்று முன்தினம் முத்துப்பேட்டை வருவாய் ஆய்வாளர் விக்னேஷ், வட்ட நில அளவையர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் அர்ச்சுனன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தில் குளம் இருந்த இடத்தை அளவீடு செய்து கண்டுபிடித்து புகார்தாரர் ராஜேந்திரன் மற்றும் கிராம பிரதிநிதிகளிடம் காட்டினர்.

விரைவில் அப்பகுதியில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் மண்டிக்கிடக்கும் செடிக்கொடிகளை அகற்றிய பின்னர் கல் ஊன்றி இடம் பத்திரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் தூர்ந்துபோன குளத்தை மீண்டும் புனரமைப்பு செய்து குளம் உருவாக்கப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: