காரைக்கால் அருகே இரட்டை கொலை வழக்கில் பெண் சிறையில் அடைப்பு

காரைக்கால் :  காரைக்கால் அடுத்த நல்லாத்தூர் மேலபடுக்கை கிராமத்தில் வசித்து வரும் பரமசிவம் மகள் துர்கா லட்சுமி (36). இவருக்கு, அக்கரைவட்டத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து தாய் வீட்டில் தங்கியிருந்தார். ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென அதிகாலை எழுந்த துர்கா லட்சுமி மண்வெட்டியை எடுத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத பச்சிளம் குழந்தை தனு, பாட்டி வேதவல்லி (85), தந்தை பரமசிவம் (75), தாய் தமிழரசி (65), சகோதரர்கள் ஆண்டவர் (45), நடராஜன் (40) ஆகியோரை சரமாரியாக தாக்கியதோடு தன்னையும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

அலறல் சத்தம் கேட்டு  எழுந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தை மற்றும் உறவினர்களை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் துர்கா லட்சுமியின் 3 மாத குழந்தை மற்றும் அவரது பாட்டி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த துர்கா லட்சுமி உட்பட அவரது தாய், தந்தை, 2 சகோதரர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதித்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் குழந்தை

மற்றும் பாட்டியை கொலை செய்ததாக துர்கா லட்சுமியை கைது செய்தனர். அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், துர்கா லட்சுமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: