கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ்நாட்டு பக்தர்கள் 2,500 பேருக்கு அனுமதி: பிப். 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் மார்ச் முதல் வாரம் நடைபெறவுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,500 பக்தர்கள் படகில் செல்கின்றனர். இலங்கை, கச்சத்தீவில் மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறும். விழாவில் பங்கேற்க இலங்கை நெடுந்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3,500 பக்தர்களுக்கு இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ராமேஸ்வரம் வேர்கொட்டு புனித ஜோசப் சர்ச் பங்குத் தந்தையும், கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளருமான பாதிரியார் தேவசகாயம் கூறுகையில், ‘‘புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 2,500 பக்தர்கள் கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பக்தர்கள் பயணிப்பதற்கு 60 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பெயர்கள் பதிவு செய்ய பிப். 3ம் தேதி சர்ச் வளாகத்தில் விண்ணப்பம் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். காவல்நிலையத்தில் சான்றும், அரசு ஊழியர்கள் அவர்களது உயரதிகாரிகளிடமிருந்து ஆட்சேபமின்மை சான்றும் பெற்று வழங்கவேண்டும்’’ என்றார்.

Related Stories: