ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை  மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்கள் முத்துச்சாமி, கே.என்.நேரு, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொஹிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான், மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்தும், தலைவர்கள் பிரசாரம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Related Stories: