தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஜூனில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்-மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ஜூன் மாதம் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது மேயர் ஜெகன்பெரியசாமி பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டப்பணியில் சத்திரம் தெரு, வஉசி கல்லூரி, அண்ணா நகர், சிதம்பர நகர், முனியசாமிபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட், செல்வநாயகபுரம், செயின்ட்தாமஸ், குரூஸ்புரம், போல்டன்புரம், கடற்கரை சாலை, பாளை. ரோடு ஆகிய 12 இடங்களிலுள்ள பம்பிங் ஸ்டேஷன்களுக்கு பம்ப் ஆபரேட்டர்கள் நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் தற்காலிக முறையில் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

மாநகராட்சி பகுதிகளில் கடந்த காலங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. புதிய நிர்வாகம் பொறுப்பேற்றவுடன் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். அனைத்து வார்டுகளிலும் இரவு நேரங்களில் இருள் இல்லாத நிலையை ஏற்படுத்திட மின்விளக்கு பராமரிப்பு பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

15வது நிதிக்குழு மானியம் 2022-23ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலமாக ₹553.85லட்சம் மதிப்பில் மாநகராட்சியின் 60வார்டுகளிலும் எல்இடி தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் மொத்தம் 2887 புதிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சியில் பொதுசுகாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் பொதுகழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளது. சில கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் பொதுகழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு தேவையான இடங்களில் வரும் நாட்களில் பொதுக்கழிப்பிடம் அமைத்து கொடுக்கப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் பூங்காங்கள் எல்லாம் பொலிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்தும் விடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மொத்தம் 152 பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தன. தற்போதுள்ள சூழலில் மாநகராட்சியில் 41 பூங்காக்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் மற்ற பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பூங்காக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு புதிய பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தூத்துக்குடியை சிறந்த மாநகராட்சியாக மாற்றிடும் நோக்கத்தில் அதற்கான வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கும், மாநகராட்சியின் வளர்ச்சிக்கும் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதங்களுக்கு இடையே மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: