பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்

சென்னை: பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் விஏஒவுக்கு 4 ஆண்டு சிறை தண்டைனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அம்பத்தூர் வட்டம் பொத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி கே.சுலோச்சனா.  இவர், பொதிகை நகரில் 1500 சதுர அடி இடத்தை தனது பெயரில் கிரையம் பெற்று, பட்டா மாறுதல் பெறுவதற்காக கடந்த 09.01.2012 அன்று பொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கே.கந்தசுவாமி என்பவரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர், ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான், பட்டா வழங்க ஏற்பாடு செய்வேன் என்று  கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சுலோச்சனா, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை  அலுவலகத்தில்  புகார் அளித்தார். அதில், பொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசுவாமி என்பவர் பட்டா வழங்க ரூ.5 ஆயிரம்  லஞ்சம் கேட்பதாக தெரிவித்து இருந்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விஏஓ கந்தசுவாமியிடம் சுலோச்சனா கொடுத்தபோது, அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் கே.கந்தசுவாமி மீது சென்னை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் லவக்குமார் கடந்த 08.02.2012ம் தேதி வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார்.  வழக்கை  விசாரணை செய்த நீதிபதி  ஆர்.வேலரஸ்  பட்டா வழங்க கிராம நிர்வாக அலுவலர் கந்தசுவாமி, புகார்தாரர் சுலோச்சனாவிடமிருந்து லஞ்சமாக பணம் கேட்ட குற்றத்திற்காக 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்கவும் உத்திரவிட்டார். 

Related Stories: