அழகியை பழக வைத்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 4 பேர் கைது: கார், பைக் பறிமுதல்

சென்னை:அழகியை பழக வைத்து, தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து கார், பைக் ஆகியவற்றை செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவர், மறைமலை நகர் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இவர் பல்வேறு தொழிலாளர்களின் பிஎப் பணத்தை அவர்களின் கணக்கில் போடவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தொழிலாளர்கள் சிலர் அஞ்சூரை சேர்ந்த பிரபாகரன் (32), அம்மணம்பாக்கத்தை சேர்ந்த கன்னியப்பன் (26) ஆகியோரிடம் கூறியுள்ளனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட 2 பேரும் பாஸ்கரிடம் பேசி இதை பெரிய பிரச்னையாக்குவோம் என்று கூறி அவரிடம் பணம் பறித்துள்ளனர். மேலும், இதுகுறித்து இருவரின் நண்பரான திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் பகுதியைச் சேர்ந்த பிரசன்ன பாலாஜி (36) என்பவரிடம் கூறி அவர் பெரிய தொழிலதிபர் என்றும், அவரிடம் மேலும் பணம் கறக்கலாம் என்றும் ஆசை காட்டி உள்ளனர். இதையடுத்து, பிரசன்ன பாலாஜி தனது கள்ளக்காதலியான வடகடம்பாடியைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ரஞ்சிதா (24) என்பவரிடம் கூறி பாஸ்கரின் செல்போன் எண்ணைக் கொடுத்து அவரிடம் நட்பாக பழகும்படி கூறி உள்ளனர்.

அதன்படி, ரஞ்சிதாவும் பாஸ்கரிடம் அடிக்கடி அலைபேசியில் பேசி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உங்களைப் பார்த்தேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி பழகத்தொடங்கி உள்ளார். மேலும், 2 பேரும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று உல்லாசமாக இருக்கத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி பாலாஜியை செல்போனில் அழைத்த ரஞ்சிதா உனக்காக சென்னேரி பகுதியில் காத்திருக்கிறேன். என்னை வந்து அழைத்துச் செல் என்று கூறி உள்ளார். பாஸ்கரும் தனது பைக்கில் வந்து, ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு சிறுங்குன்றம் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது, காரில் வந்த பிரசன்ன பாலாஜி, பிரபாகரன், கன்னியப்பன் ஆகிய 3 பேரும் அங்கு சென்று தனியாக இருந்த பாஸ்கர் மற்றும் ரஞ்சிதா ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து பாஸ்கரிடம் இருந்த 2 செல்போன்கள், ரூ.28 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேலும், இதை வெளியே சொன்னால் நீ இந்தப் பெண்ணுடன் இருந்த வீடியோ, போட்டோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து மீண்டு வந்த பாஸ்கர் இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் பாஸ்கரின் செல்போன் எண்ணை சோதனை செய்தனர்.

இதில், ஏற்கனவே ரஞ்சிதாவுடன் பிரசன்ன பாலாஜி தொடர்பில் இருந்ததும், கன்னியப்பன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் செல்போனில் பாஸ்கரிடம் பேசி இருந்ததும் தெரியவந்தது. இதனால், போலீசார் 4 பேரையும் பிடித்து, நடத்திய விசாரணையில், பிரசன்ன பாலாஜி கொடுத்த ஐடியாவின்படி அனைவரும் செயல்பட்டு தொழிலதிபர் பாஸ்கரிடம் பணம் பறிக்க முயற்சித்ததும், திட்டமிட்ட நேரத்தில் அவரிடம் பணம் இல்லாததால் கூகுள் பே மூலம் ரூ.28 ஆயிரம் மட்டும் தங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதும் தெரியவந்தது.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரசன்ன பாலாஜி (36), ரஞ்சிதா (24), பிரபாகரன் (32), கன்னியப்பன் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: