10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மாணவி குளிக்கும்போது புகைப்படம் எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்த பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து வேலை தேடி, மகளுடன்  சென்னை வந்த தாய் ஒருவர், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தார். இவர், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பீகார் செல்ல வேண்டி இருந்ததால், 10ம் வகுப்பு பயிலும் தனது மகளை, அதே பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த தனக்கு தெரிந்தவர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

அந்த வீட்டில் இருந்த பீகாரைச் சேர்ந்த ராகுல் குமார் என்பவர், மாணவி குளிக்கும் போது மறைந்திருந்து செல்போனில் புகைப்படம் எடுத்து, அதைக்காட்டி பணம், நகைகளை பறித்ததுடன், மாணவியை கிழக்கு கடற்கரைச் சாலைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: