முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து டாக்டரை தாக்கி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்த 4 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மருத்துவர் சதீஷ்குமார் (28). இவர், சோழிங்கநல்லூர் காந்தி நகரில் 3 வருடங்களாக கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில், இவர் தனது கிளினிக்கை மூடுவதற்கு தயாரானார். அப்போது, மருத்துவம் பார்க்க வருவதுபோல், உள்ளே வந்த 2 நபர்கள் திடீரென மருத்துவர் சதீஷ்குமார் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து, அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவர் கழுத்தில் வைத்து மிரட்டி கிளினிக் கதவை உள்பக்கமாக மூடினர். பின்னர், மருத்துவரை அறையில் அடைத்து வைத்து, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

பின்னர், மருத்துவரின் செல்போன், கார் சாவி ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். பின்னர், போலீசில் சிக்காமல் இருக்க மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து, ஹாட் டிஸ்க்கை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது, மருத்துவர் கூச்சலிட்டதால் பொதுமக்கள் திரண்டு, 2 பேரையும் துரத்தினர். அப்போது, வெற்றிச்செல்வன் (35) என்ற நபர் தப்பி ஓடினார். பிரகாஷ் (38) என்பவர், ராஜிவ்காந்தி சாலை வழியாக ஓட முயன்றபோது, அவ்வழியே வந்த கார் மீது மோதி கீழே விழுந்துள்ளார். வாகனம் மோதியதில் காயங்களுடன் இருந்த பிரகாஷை அப்பகுதி மக்கள் பிடித்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், உதவி ஆய்வாளர் ராகவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து பிரகாஷை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். விசாரணையில், நீலாங்கரையில் வசித்து வரும், காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவருடன் சேர்ந்து மருத்துவரிடம் கொள்ளையடித்தது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படையினர் நீலாங்கரையில் பதுங்கி இருந்த வெற்றிச்செல்வன் (35), அவரது கூட்டாளிகள் சத்தியசீலன் (36), பிரதாப் (36) ஆகிய 3 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்ததில், ஒரு துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது. பின்னர், 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டாக்டர் சதீஷ்குமார் மற்றும் கைதான சிதம்பரத்தை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய 2 பேரும், சுமார் 10 வருட நண்பர்கள். இருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனகசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். டாக்டர் சதீஷ்குமாரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த சத்தியசீலன், அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், பிரகாஷின் தம்பி பிரதாப், வெற்றிச்செல்வன் ஆகிய 3 பேருடன் இணைந்து கொள்ளையடித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்தது.கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை காவல் உதவியாளர் ஒருவர் இவர்களை பிடிக்க வந்தபோது, இந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பி சென்றுள்ளனர். பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட இந்த துப்பாக்கி வாஙகியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, 4 பேரையும் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்திரிக்கோல், பெப்பர் ஸ்ப்ரே, கொள்ளையடித்த கார் சாவி, சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்க் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: