பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் சிக்கல் வருகிறது: ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு

ராஞ்சி: பாஜ  ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் சிக்கல் ஏற்படுகிறது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டினார். ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் கடந்த 1932 ஆம் ஆண்டு நிலப் பதிவேடுகளைப் பயன்படுத்தி மக்களின் இருப்பிட நிலையைத் தீர்மானிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் மாநில அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பினார். இதுபற்றி  செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில்  வெகுஜன மக்கள்தொகை திட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது: இந்த மசோதா குறித்து ஆளுநரின் நடவடிக்கையை நான் எதிர்பார்க்கவில்லை. அரசுகளின் சிந்தனைக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுவது புதிதல்ல. இது ஜார்கண்டில் மட்டுமல்ல, பாஜ ஆட்சியில் இல்லாத பல மாநிலங்களிலும் நடக்கிறது. அவர்கள் கவர்னர்கள் மூலம் சிரமப்படுகின்றனர். ஆனால் இது டெல்லி, ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிக்கோபார் அல்ல என்பதை நான் என் எதிரிகளிடம் கூற விரும்புகிறேன். இது ஜார்கண்ட். இங்கு அரசு விரும்புவதுதான் நடைமுறைப்படுத்தப்படும். ஆளுநர் விரும்புவது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: