சுந்தர் ரன் அவுட் என் தவறால் வந்தது; சூழலுக்கு ஏற்ப விளையாடுவது முக்கியமானது.! ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி

லக்னோ: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. சுழலுக்கு சாதகமான இந்த பிட்ச்சில் ரன் அடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். 20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னர் 19 ரன் அடித்தார். இந்திய பவுலிங்கில், அர்ஷ்தீப் சிங் 2, பாண்டியா, சுந்தர், சாஹல், குல்தீப், தீபக் ஹூடா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் கில் 11, இஷான்கிஷன் 19, ராகுல்திரிபாதி 13, சுந்தர் 10 ரன்னில் வெளியேற சூர்யகுமார் யாதவ் (26 ரன், 31 பந்து), பாண்டியா (15 ரன், 20 பந்து) பொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தனர்.

19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-1 என தொடரை இந்தியா சமன் செய்த நிலையில் கடைசி போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடக்கிறது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் பாண்டியா கூறியதாவது: ‘‘எங்களால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் பேட்டிங் செய்தோம். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றாலே, வெற்றிபெற முடியும் என நினைத்துதான் நானும், சூர்யகுமாரும் விளையாடினோம். அடிக்கடி சிங்கில் எடுத்தாலே, அழுத்தங்கள் இல்லாமல் விளையாட முடியும் என முடிவு செய்து தான் விளையாடினோம். இது மாதிரியான போட்டிகளில் பதற்றம் அடையக் கூடாது. நாங்கள் ரிஸ்க் எடுப்பதற்கு பதிலாக ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டோம். நியூசிலாந்து பேட்டர்களை அடிக்கடி சிங்கில் எடுக்க விடவில்லை.

இதனால்தான், அவர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு, பெரிய ஷாட்டை ஆட முயற்சி செய்து, விக்கெட்களை இழந்தனர். ஸ்பின்னர்கள் அனைவரும் தங்களது வேலையை சிறப்பாக செய்தனர். இந்த பிட்சில் 120 ரன் கூட சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும்,” என்றார். ஆட்டநாயகன் சூர்யகுமார் அளித்த பேட்டி: சூழலுக்கு ஏற்ப விளையாடுவது முக்கியமானது. வாஷிங்டனை இழந்த பிறகு நான் இறுதிவரை பேட்டிங் செய்ய வேண்டியதை உறுதி செய்ய வேண்டி இருந்தது. அந்த ரன் அவுட் என் தவறால் வந்தது. பந்து எங்கு சென்றது என்று நான் பார்க்கவில்லை. நிச்சயமாக இது ஒரு சவாலான பிட்ச். சவாலானதாக இருந்தாலும் நம்மால் ஆட்டத்தை மாற்றி அமைக்க முடியும். இறுதியாக எங்களுக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. இப்படியான ஆடுகளத்தில் அதற்கு நாம் அமைதியாக செயல்பட வேண்டும். நான் வெற்றிக்கான ரன்களை அடிப்பதற்கு முன் ஹர்திக் என்னிடம் வந்து, இந்தப் பந்தில் நீங்கள் வெற்றிக்கான ரன்னை அடிப்பீர்கள்’ என்று கூறினார். எனக்கு அது மிகுந்த நம்பிக்கையை அளித்தது, என்றார்.

Related Stories: