பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டி திட்டம் மூலம் 80% புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: சமூக நலத்துறை அதிகாரி தகவல்

சென்னை: சமூக நலத்துறை சார்பில் பணியிடங்களில் வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான ‘‘பாதுகாப்பு பெட்டி திட்டம்’’ மூலமாக இதுவரை 80 சதவீதம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்கும் வகையில்,  தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது. அதன்படி, அண்மையில் வெளியான தனியார் நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் ‘‘இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை’’ என அறிவிக்கப்பட்டது.

அதேபோல், பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 7 நகரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டன. மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பெண்களின் வாழ்வாதாரம் சிறப்பாக உள்ளது என்று கணக்கெடுப்பில் கூறப்பட்டது. அந்தவகையில், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதற்காக கடந்த 2013ம் ஆண்டு பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த சட்டம், முறைசார் மற்றும் முறைசாரா துறைகள் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனம், அரசு மற்றும் பொது துறைகளுக்கும் பொருந்தும். ஒரு பெண்ணின் வேலை வாய்ப்புகளுக்காக மறைமுகமான அல்லது வெளிப்படையான வாக்குறுதி அல்லது மிரட்டல், பெண்களின் ஆரோக்கியம், பாதுகாப்பை பாதிக்க கூடிய வகையில் பணிச்சூழலை உருவாக்குதல், அவமானகரமாக நடத்துதல் உட்பட பணியிடத்தில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கான விரிவான வரையறையை இந்த சட்டம் கொண்டுள்ளது. இந்த சட்டத்தில் வயது, பதவி உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல், அமைப்புசார் அல்லது அமைப்புசாரா துறைகளில் இருந்தாலும், அரசு, தனியார் துறையாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது.

வீட்டு பணியாளர்களும் இந்த சட்டத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு மே மாதத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்களை சேர்ந்தவர்களை அழைத்து புகார் பெட்டி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதை பராமரிக்கவும், அதில் புகார்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களால் 5 நபர்களை கொண்ட உள்ளூர் புகார் குழு, ஒவ்வொறு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 10 பேருக்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட நிறுவனங்களில் உள்ளார்ந்த புகார்கள் குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் 4 பேர் இருக்க வேண்டும். அதில் ஒருவர் பணியிடத்தை சாராத சமுக அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். புகார் பெட்டிகளை பெண்கள் எளிதில் அணுகும் இடங்களில் வைக்க வேண்டும். உரிமையாளருக்கு இந்த சட்டம் பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பை வழங்குகிறது.

நிறுவனங்கள் இந்த சட்டத்தின் விதிகளைப் பற்றி பணியாளர்கள் அறிந்து கொள்வதற்காக, முறையான இடைவெளிகளில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டும், பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை விவரங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிட வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதாவது தொடுதல், தவறாக பார்வையிடல், இரட்டை பொருள்பட பேசுதல், ஆபாச படங்கள் அனுப்புதல், பாலியல் உறவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழைத்தல் உள்ளிட்டவை பணி செய்யும் இடத்தில் ஏற்படுமாயின் அது குறித்து புகாரினை பெட்டியில் போடலாம். பாதுகாப்பு பெட்டிக்குள் புகார்கள் பெறப்பட்டால் உடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து திறக்கப்படும்.

பூட்டின் ஒரு சாவி உள்ளக புகார் குழு தொழிலாளர் உறுப்பினரிடமும், மற்றொரு சாவி உள்ளக புகார் குழு சமூக அமைப்பு சார்ந்த உறுப்பினரிடமும் இருக்கும் என்பதால் மனு மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உள்ளக புகார் குழு உறுப்பினர்களின் முன்னிலையில் பெட்டியிலிருந்து எடுக்கப்படும் மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். உள்ளக புகார் குழுவால், விசாரணையின் அடிப்படையில் மேற்கண்ட சட்ட விதிகளுக்கேற்ப, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்டியில் போடப்பட்ட மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற நிலையில், உள்ளக குழுவின் விசாரணை திருப்தி அளிக்காத பட்சத்தில், எந்த தொழிலாளரும் மகளிர் உதவி எண் 181க்கு அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரால் அமைக்கப்பட்ட உள்ளூர் புகார் குழுவை அணுகி தகவல் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பெட்டிகள் குறித்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 2,792 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 4,088 உள்ளார்ந்த புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 711 பணியிடங்களில் பாதுகாப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 122 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 97 புகார்கள் மீது அதாவது 80 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் நிறுவனங்களில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் சோதனை நடத்தி புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: