வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது: வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலை வருகிற பிப்.27ம் தேதி நடத்துவதாக கடந்த 18ம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31ம் தேதி) துவங்குகிறது. பிப்ரவரி  7ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

பிப்ரவரி 8ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த 18ம் தேதி மாலையில் இருந்தே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. 238 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்து, பழுதுகளை நீக்குதல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகள் நடந்துள்ளது.  

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் நாளை (31ம் தேதி) துவங்க உள்ளதையொட்டி, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன், கூடுதலாக 4 பேர் மட்டுமே அனுமதி, வேட்பாளருடன் 3 கார் மட்டுமே வர வேண்டும், வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ‘கை’ சின்னத்தில் போட்டியிடுகிறார். தேமுதிக வேட்பாளராக மாவட்ட செயலாளர் ஆனந்த் ‘முரசு’ சின்னத்திலும், அமமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் சிவபிராந்த் ‘குக்கர்’ சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகிற 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: