மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இம்மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வேலு, கவிப்பேரரசு வைரமுத்து, தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் ஆலோசகர் காமேஸ்வரன், தலைவர் திருமலைவேலு, செயலாளர் எம்.என்.சங்கர், பொருளாளர் ரகுநந்தன், மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  காது, மூக்கு, தொண்டை, கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் தமிழ் என்று அழைக்கத்தோன்றுவது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் ஆங்கிலத்தில் தான் நடக்கும். ஆனால் தமிழில் நடைபெறும் என மருத்துவர் காமேஸ்வரன் அறிவித்து அதனை நடத்திக்கொண்டிருக்கிறார். குறிப்பாக இதுபோன்ற மாநாடுகள் பெரிய உணவு விடுதிகளில் மட்டுமே நடக்கும். ஆனால் இந்த மாநாடு முத்தமிழ் பேரவையில் நடப்பது கூடுதல் சிறப்பு. இன்றைக்கு கலைஞர் இருந்து இருந்தால் நிச்சயம் பெருமைப்பட்டு இருப்பார். கலைஞர் உடல்நிலை சரியில்லாத போது முக்கிய மருத்துவராக இருந்தவர் மருத்துவர் காமேஸ்வர். கலைஞரின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் தனக்கும் கலைஞருக்கும் இருந்த உறவு மருத்துவர் நோயாளி என்று இல்லாமல் தந்தை மகன் உறவு என்று இருந்ததாக கூறினார். அந்த வகையில் அவர் எனக்கு சகோதரர்.

மேலும், தாய்மொழியில் இம்மாநாடு நடத்தப்படுவது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. நிர்வாகத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ், பள்ளிகளில் தமிழ், கல்லூரிகளில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், இசையில் தமிழ் என எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அண்ணா, கலைஞர் வழியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக விளங்கி வருகிறது. அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில்  மொழி பெயர்த்து அரசின் சார்பில் வெளியிட்டுள்ளோம். தொழில் படிப்புகளை தாய்  மொழியில் படிக்க நூல்களை தாய் மொழியில் மொழி பெயர்க்கும் பணியை தொடங்கி  உள்ளோம்.

மேலும், மருத்துவம் நவீனமாகி வருகிறது. ஆனால் அதிக தொகையை செலவழிக்க வேண்டியதாக உள்ளது அதன்படி,நவீன  மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில்  மக்களை தேடி மருத்துவம், நம்மைக்காக்கும் 48 திட்டங்கள் மூலமாக வழங்கி  வருகிறோம். என்றாலும் அதிக மக்கள் தொகை உள்ள நாட்டில் அரசு மட்டும் இதை முன்னெடுத்தால் போதாது. தனியார் மருத்துவமனையின் பங்களிப்பும் தேவையாக உள்ளது.

அந்தவகையில், தனியார் மருத்துவமனை பங்களிப்பில் கட்டணம் என்பது  ஏழைகளுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கல்வியும்  மருத்துவமும் சேவை துறைகள். அவை சேவை துறையாகவே செயல்பட வேண்டும். உலகில்  திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு மெடிக்கல் சிட்டி என்று  தான் பெயர். எத்தகைய நோயையும் குணப்படுத்தக்கூடிய வசதி இங்கு உண்டு. அதனால் மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: