வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது. கடந்த ஆண்டை விட வரத்து அதிகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமின்றி, சில்லரை விற்பனை கடைகளுக்கும்,  ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாபழம், அன்னாசி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. அனை, உள்ளூர் மட்டுமின்றி, கேரள மாநிலம் மற்றும் வால்பாறை பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

இதில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வரத்து வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடைவெயிலின் தாக்கத்தின்போது தர்பூசணி வெளிமாவட்டங்களில் இருந்து  கொண்டுவருவது வழக்கமாக உள்ளது. அதிலும், பிப்ரவரி மாதமே தர்பூசணி வரத்து துவக்கமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பெய்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்பூசணி விளைச்சல் அதிகமானது. விளைச்சல் ஒருபக்கம் இருந்தாலும்,  இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் காரணமாக, மார்கெட்டுக்கு முன் கூட்டியே, நடப்பு மாதத்தில் இரண்டு வாரத்துக்கு முன்பே தர்பூசணி வரத்து துவங்கியது.

காந்தி மார்க்கெட்டில் உள்ள பல கடைகளில் குவிந்துள்ள தர்பூசணிகளை, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, உடுமலை, திருப்பூர், கோவை, பல்லடம், ஈரோடு மற்றும் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, வியாபாரிகள் நேரில் வந்து விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தர்பூசணி வரத்து, அதிகமாக உள்ளது. இதில் பெரும்பாலும் திருவண்ணாமலை, தாராபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதியிலிருந்தே வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் வெளி மாவட்டங்களிலிருந்து தர்பூசணி வரத்து சற்று குறைவால், அந்நேரத்தில் துவக்கத்திலிருந்தே ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.25வரை என தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டில், தர்பூசணி இப்போதே அதிகமாக உள்ளதால், மார்க்கெட்டில் ஒருகிலோ ரூ.15 முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மாதங்களான பிப்ரவரி மற்றும் மார்ச், ஏப்ரல் மாதத்தில், தர்பூசணி விற்பனை அமோகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் கிடையாது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது, தர்பூசணிக்கு மேலும் அதிகரிக்கும் என்பதால், அந்நேரத்தில், அதன் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. என என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: