ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் பின்னர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அறிவிக்காமல் பாஜக மவுனம் காத்து வருகிறது. கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்தார். அதிமுக பிரிந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள், 98.5% பேர் ஒரே அணியில்தான் இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாட்களுக்குள் முடிவு தெரியும் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால், தனித்தே போட்டியிடுவதாக அதிமுக அறிவித்ததால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: