போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.84 லட்சம் அபேஸ் செய்தவர் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை

தண்டையார்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடகு கடை நடத்தி வருபவர் நரேஷ் ஜெயின் (36). இவரது கடையில் கடந்த 24ம் தேதி புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர், 25 கிராம் நகைகளை கொடுத்து, தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்து  இருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உடனடியாக பணம்  தேவைப்படுவதாகவும் கூறி ரூ.92 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார்.

அதேபோல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடகு கடை நடத்தி வரும் தினேஷ் ஜெயின் (38) என்பவரது கடையில் 25 கிராம் நகைகளை கொடுத்த மணிகண்டன், அதே காரணத்தை கூறி  ரூ.92 ஆயிரத்தை பெற்று சென்றுள்ளார். இந்த நகைகளை அடகு கடை உரிமையாளர்கள் சோதனை செய்தபோது, போலி நகை என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அடகு கடை உரிமையாளர் நரேஷ் ஜெயின், தினேஷ் ஜெயின் ஆகிய 2 பேரும் புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்து, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: