காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வீடு புகுந்து மகள்களை கடத்திய பெற்றோர்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே காதல் திருணம் செய்த புதுப்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்றது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் பிரவீன்குமார் (22). பி.இ பட்டதாரி இவர், எருமப்பட்டி அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுசல்யா (22) என்பவரை, கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து இருவரின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவுசல்யா, தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதை அடுத்து போலீசார் அவரை, பிரவீன்குமாருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அக்கியம்பட்டியில் உள்ள பிரவீன்குமாரின் வீட்டில் கவுசல்யா இருந்தபோது, அங்கு காரில் வந்த மர்மநபர்கள், கவுசல்யாவை வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். புகாரின்பேரில்,  சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து கவுசல்யாவை அவரது பெற்றோர் ஆட்களை வைத்து கடத்திச்சென்றார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: தென்காசி இலஞ்சியை அடுத்த கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் மகன் வினித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் மகள் கிருத்திகாவும் பள்ளிப்பருவம் முதல் ஒருவரை ஒருவர் விரும்பியதாக தெரிகிறது. வினித் தற்போது சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி இருவரும் நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு குற்றாலம் காவல் நிலையத்தில் மனு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் கிருத்திகா குத்துக்கல்வலசை பகுதியில் வினித் மற்றும் அவரது பெற்றோருடன் தங்கியிருப்பதாக தகவல் அறித்த கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு வீடு புகுந்து கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இதுகுறித்து வினித்தின் பெற்றோர் குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: