மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. கச்சத்தீவு திருவிழா குறித்து இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் அரசாங்க அதிபர் சிவஞானசுந்தரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சொந்தமான புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த கொரோனா காலங்களில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவில்லை. பின்னர், கடந்த ஆண்டு நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவிற்கு குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், மார்ச் 3-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கப்பட்டு பின்னர், மார்ச் 4-ம் தேதி நிறைவுப்பெற உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. எனவே, ஆண்டுதோறும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். இவ்வாண்டுக்கான கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 5,000 பேரும், இலங்கையில் இருந்து 10,000-க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: