டெல்லியில் தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: டெல்லியில் தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வு மன அழுத்தம், கல்வி, தொழில் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கிறார். பரிக்ஷா பே சர்ச்சா 2023 என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். நிகழ்ச்சிக்காக சுமார் 30 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 20 லட்சம் கேள்விகள் பெறப்பட்டுள்ளது.

தேர்வினால் வரும் மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்ப்பது என மதுரையை சேர்ந்த அஸ்வினி பிரதமரிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு முதல் பந்திலேயே அஸ்வினி என்னை அவுட்டாக்க பார்க்கிறார் என பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார். தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயற்கையானதுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எதிர்பாப்புகளை பற்றி மாணவர்கள் கவலைப்படாமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு, மதிப்பெண் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தேர்வின் போது அதிக முயற்சி எடுக்கும் மாணவர்கள் உங்கள் முயற்சிகள் வீணாகாது என்று நான் உறுதியளிக்கிறேன் என்று பரிக்ஷா பே சர்ச்சா 2023 இன் போது பிரதமர் மோடி கூறினார். சில மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதற்கு தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் வெற்றி கிட்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உங்கள் தாயின் நேர மேலாண்மைத் திறனை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு தாய் தான் செய்யும் மகத்தான பணியால் ஒருபோதும் சுமையாக இருப்பதில்லை. உங்கள் தாயைக் கவனித்தால், உங்கள் நேரத்தை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது என்பது உங்களுக்குப் புரியும் என்று பரிக்ஷா பே சர்ச்சா 2023 இல் மாணவர்களுக்கு பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் எனக்கு ஆலோசனை கேட்டு எழுதுகிறார்கள். இது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் வளமான அனுபவம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories: