சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை தாக்கிய 2 போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலான தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மீனா, காவலர் திருநாவுக்கரசு மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் நேற்று அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அயனாவரம் வாட்டர் டேங்க் ரோடு வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உயிரிழந்த ரவி என்பவரின் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒரு கும்பல், சாலையில் போக்குவரத்தை மறித்து சேவல் சண்டை விட்டது. இதனை காவலர் திருநாவுக்கரசு என்பவர், இதை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதை காவலர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேர், காவலரிடம் தகராறு செய்து, அவரை வலது பக்க கன்னத்தில் ஓங்கி குத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் மீனாவையும் கையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீனாவுக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், தகராறில் ஈடுபட்ட அயனாவரம் சோலை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சஞ்சய் (20), அயனாவரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த குணசேகரன் (35) ஆகிய 2 பேரையும் அயனாவரம் போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: