பாமக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: 2வது மனைவியின் மகன் வெறிச்செயல்

ஆத்தூர்: சேலம் ஆத்தூரில், போதையில் தாயிடம் தகராறு செய்த பாமக நிர்வாகியை 2வது மனைவியின் மகன், ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(46). பாமக பிரமுகரான இவர், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மீனா (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்த மீனா ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வந்தார். சமீபகாலமாக கிருஷ்ணராஜ்-மீனா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. போதையில் வீட்டுக்கு வரும் கிருஷ்ணராஜ், தினமும் மீனாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், வழக்கம் போல கிருஷ்ணராஜ்-மீனா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தில் மீனாவை கிருஷ்ணராஜ் தாக்கி உள்ளார்.

இதை கண்ட விக்னேஷ் கத்தியை எடுத்து, கிருஷ்ணராஜை வெட்ட ஓடி வந்துள்ளார். இதனால் அங்கிருந்து தப்பியோடிய கிருஷ்ணராஜ், பக்கத்து வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், விடாமல் பின்தொடர்ந்து ஓட ஓட  விரட்டிச்சென்ற விக்னேஷ், வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக, விக்னேஷிடம் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: