தமிழகத்தின் இரண்டாவது உயரமான சோத்துப்பாறை அணை தூர்வாரப்பட வேண்டும்: தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது. இதனால், அணையில் அதிகளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு முக்கியத்தும் அளித்து வரும் தமிழக அரசு, அணையை தூர்வாரினால் அதிகளவில் நீரை தேக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பழநி மலைத்தொடரில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. இந்த ஏரிதான் சோத்துப்பாறை அணைக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேற்குமலைத் தொடர்ச்சியில் இருந்து 2090 மீட்டர் அடி உயரத்தில் பழநி மலையில் உற்பத்தியாகி, கிழக்குச் சரிவின் வழியாக சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து ஆறாக வருகிறது. அந்த ஆற்றிற்கு வராகநதி என்று பெயர் வைத்துள்ளனர். கி.பி.1891ம் ஆண்டு சுகாதாரப் பொறியாளராக பணியாற்றிய ஜோன்ஸ் என்பவரால் பெரியகுளம் நகருக்குத் தேவையான குடிநீர் திட்டம் ஒன்றை ரூ.1,25,000 மதிப்பீட்டில் தயார் செய்து மதராஸ் கவர்மெண்டிற்கு அனுப்பினார்.

கி.பி.1895ம் ஆண்டு மேற்குமலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பேரீஜம் ஏரியிலிருந்து தண்ணீரை பெரியகுளத்திற்கு கொண்டு வருவதற்கு அன்றைய ஜமீன்தார் திவான் பகதூர் வெங்கிட்ட ராமபத்ர நாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து குழாய்த்தொட்டி என்ற இடத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. 2 உயர்ந்த மலைகளுகளுக்கிடையே வருகின்ற ஆற்றை மறித்து அணைக்கட்டும் திட்டம் உருவானது. சோத்துப்பாறை அணைத் திட்டத்திற்குத் தேவையான நிலங்கள் 1982ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்துவதில் 14.55 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியாக இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டு ஆரம்ப கால கட்டுமானப் பணிகள் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது.

2 மலைகளுக்கு இடையே அணைக் கட்டுமானம் பணி துவங்கி 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் இந்த அணை திறப்பு விழா காணப்பட்டது. அதன் பின்னர் 15.11.2001ல் மாலை 6.40 மணிக்கு முதன்முதலாக‌ அணை நிரம்பியது. 21.11.2001ல் தேனி மாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த் முன்னிலையில் அணை திறக்கப்பட்டது.

அணையின் பின்புறம் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை அருந்தும். இதனைப் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். சோத்துப்பாறை அணையின் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். இவை தவிர அணையில் வழிந்தோடி வரும் நீரில் குளித்து மகிழலாம். மேலும் அணையிலிருந்து பார்த்தால் பெரியகுளம் நகரைக் காணலாம். கண்ணுக்கு எட்டிய வரை மாந்தோப்புகள் அதிகமாக இருக்கும்.

அணைக்கு மேலே டைகர் பால்ஸ் என்ற அருவி உள்ளது. அணையில் பல பூங்காக்கள் உள்ளன‌. குடும்பத்துடன் சென்றால் கட்டணமில்லாமல் கண்டு களிக்கலாம். அணையின் மொத்த நீளம் 345 மீட்டர் ஆகும். நீர்வரத்தின் பரப்பு 38.40 சதுரகிலோ மீட்டர் ஆகும். நீர்வரத்தின் முழுக்கொள்ளவு 100 மில்லியன் கன அடி. அணையின் அதிகபட்ச உயரம் 57 மீட்டர் ஆகும். அணையின் மேல்மட்ட அகலம் 7.32 மீட்டர் ஆகும்.

இந்த அணையினால் பயன்பெறும் நிறங்கள் நன்செய் பாசனப்பரப்பு 1825 ஏக்கர், புன்செய் பாசனப்பரப்பு 1040 ஏக்கர் ஆகும். இதனால் தென்கரை, தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பயனடைகின்றன‌. இவை தவிர சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டதின் மூலம் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகின்ற‌து.

பெரியகுளத்திலிருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் வழியில் அரசமரத்தில் பனைமரம் வளர்ந்துள்ள அதிசயமான இடம் உள்ளது. பெரும்பாலும் அரச மரத்தில் ஆலவிதைகள் இருக்கும். ஆனால் அரசமரத்தில் 2 பனைமரங்கள் வளர்ந்துள்ளதைக் காணலாம். பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ.தூரம் உள்ளது. பெரியகுளத்திலிருந்து அரசுப்பேருந்து, ஆட்டோவில் செல்லலாம்.

அணையில் மேல் பகுதியில் இருபுறமும் அணை கட்டப்பட்ட காலத்தில் போடப்பட்ட மண்குவியல் அனைத்தும் அகற்றப்பட்டு வெளியே கொட்டப்படவில்ைல. அவை அணைப்பகுதியிலேயே ெகாட்டப்பட்டதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான நீர் நிற்க வழியின்றி வீணாகி வெளியேறுகிறது. எனவே விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெரும் பிரச்னை ஏற்படுகின்றது.

இதனால் அணையில் அதிக அளவு தண்ணீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய அளவில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இந்த அணையை கண்டுகொள்ளவே இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, இந்த அணையினை முறையாக தூர்வாரி மழைநீரை அதிக அளவில் தேக்கி விவசாயத்திற்கு தேவைப்படும் பொழுது அதனை திறந்து விட்டு பாசனத்திற்கு பயன்படும் அளவிற்கு செய்ய வேண்டும்.அணையின் முன்பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், வாகனம் நிறுத்தும் இடம், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென என தமிழக அரசிடமும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள உயரமான அணைகளில் ஒன்றாக சோத்துப்பாறை அணை இருக்கிறது. ஆனால், இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மிகவும் குறைந்த அளவே உள்ளது. வருடம் முழுவதும் பெரியகுளம் பகுதி மக்களுக்காக இந்த அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது. மேலும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுவதால் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை தமிழக அரசு விரைந்து செய்து கொடுத்தால், இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுவார்கள், என்றனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சோத்துப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீரை நம்பியே, இப்பகுதியில் நெல், கரும்பு, மா, தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் நடந்து வருகிறது.

ஆனால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் தேங்கியிருப்பதால், அதிகளவில் மழைநீரை தேக்க முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, தமிழக அரசு இந்த அணைப்பகுதிய முறையாக தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இயற்கை அன்னையால் அணை திறக்கப்பட்டது

1996ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை கட்டி முடிக்க ரூ.29 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும், நேரில் வந்து பார்வையிட்டு அணை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தினார். இதன் காரணமாக 2001ம் ஆண்டு அணையின் கட்டுமான பணி முழுமையாக முடிவடைந்தது. அணை திறப்பு விழா காணும் முன்பாக 2001ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சி வந்தது. இதில் செப்டம்பர் மாதம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது சோத்துப்பாறை அணை திறப்பு விழா காணாத நிலையில், நவம்பர் மாதம் அணையின் கொள்ளளவு முழுமையாக நிரம்பி அணையின் மேல் இருந்து தண்ணீர் தானாக முதல்முறையாக வழிந்தோடி வெளியேறியது. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணையை இயற்கை அன்னையே திறந்து வைத்தது. இதனையடுத்து அணையின் நீர் வழிந்தோடிய மறுநாள் அப்போதைய கலெக்டராக இருந்த அப்துல் ஆனந்த் சோத்துப்பாறை அணையின் கீழ் பகுதியில் 2 கிமீ தொலைவில் உள்ள கால்வாய் மதகுப் பகுதிக்கு வந்து கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்தார்.

Related Stories: