மதுரை மாவட்டத்தில் 2021ஐ ஒப்பிடுகையில் கடந்தாண்டில் சாலை விபத்துகள், பலி எண்ணிக்கை சரிவு

*சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வில் தீவிரம் காட்டும் போக்குவரத்து போலீசார்

மதுரை : மதுரை மாவட்டத்தில் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த 2022ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டி வருவதால் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இந்தியாவில் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து உத்தரப்பிரதேசம், ஆந்திரா மாநிலங்கள் இருந்தன.

இந்நிலையில், சாலை விபத்துகளைக் குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், கடந்த 2022ல் சாலை விபத்துகளில் இறந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. சென்னையை ஒப்பிடுகையில், மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் மிக மிக குறைந்துள்ளன.மதுரையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மற்ற மாவட்டங்களை விட, இங்கு வாகன விபத்துகளும் அதிகரித்து வந்தன. ஆனால், கடந்த 2022ல் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

தொடர்ந்து இம்மாதமும் உயிரிழப்புகள் சரிந்துள்ளன. போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து விபத்துகளை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால், விபத்துகள் மற்றும் இறப்புகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மெய்ப்பிக்கின்றன. மாநில அளவில் 2021ல் நடந்த 57,757 சாலை விபத்துகளில் மொத்தம் 15,175 பேர் இறந்துள்ளனர். 2022 நவம்பர் வரையில் நடந்த 51,024 விபத்துகளில் 13,384 பேர் இறந்துள்ளனர். விபத்து மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 6,731 பெரிய அளவிலான விபத்துகள் நடந்துள்ளன. சாலை விபத்துகளுக்கு 95 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. மதுகுடித்து விட்டு ஓட்டிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அனைத்து சாலை பாதுகாப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பு

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகின்றன. லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைகின்றனர். இதனால், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்ற காரணத்தைப் பிரசாரம் செய்வதற்காக ஜன.11ம் தேதி முதல் 17ம் தேதி வரை காலை பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடித்தது. இவ்வாரத்தில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சாலை பாதுகாப்பிற்காக பங்களிக்க அனைத்து பங்குதார்களுக்கும் வாய்ப்பளிக்கவும் தமிழ்நாடு முழுவதும் பல்லேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், சாலை விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பான பவ்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும் அடங்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற சாலைப் பயனாளிகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 2022ல் 1850 விபத்துகள் நடந்துள்ளன.

இதில், 720 பேர் இறந்துள்ளனர். கடந்த 2021 ஆண்டை ஒப்பிடும்போது 2022, சாலை விபத்துகள் குறைந்துள்ளன. விபத்து உயிரிழப்பும் குறைந்துள்ளது.

வாகனச் சோதனை தீவிரம்

* மதுரை போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டூவீலர் மற்றும் ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான விபத்துகளுக்கு டிரைவர்கள் குடி போதையில் இருப்பதும், செல்போன்களில் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்குவதும் காரணமாக அமைகின்றன. இதனை தடுக்க வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, விதிமீறும் நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது டூவீலர் ஓட்டும் நபர்கள் 95 சதவீதம் பேர் ஹெல்மெட்அணிந்தும், கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர். இதனால், விபத்துக்கள் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மதுரை நகரில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக ரூ.1 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஒரு நிமிடம் சிக்னல் நிறுத்தம்....ஒரு லட்சம் பிரசுரம் விநியோகம்

மதுரை நகர காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை நகரில் உள்ள 13 முக்கிய போக்குவரத்து சந்திப்பில் உள்ள சிக்னல்களை காவல்துறையினர் நேற்று மாலை 5.30 மணி முதல் 5.31 வரை ஒரு நிமிடம் போக்குவரத்து சிக்னல்களை நிறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்கள். மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே துணை ஆணையர்கள் (தலைமையிடம்) கௌதம் கோயல், (போக்குவரத்து) ஆறுமுகசாமி ஆகியோர் வழங்கினர்.

இதேபோன்று மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே உள்ள சிக்னலில் வடக்கு துணை ஆணையர் அரவிந்த் துண்டு பிரசுரம் வழங்கினார். பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை அருகே உள்ள சிக்னலில் தெற்கு காவல் துணை ஆணையர் சாய் பிரனீத் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். ஒவ்வொரு சிக்னல்களிலும் நூற்றுக்கணக்கான போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஒட்டிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். ஒரே நேரத்தில் 13 போக்குவரத்து சிக்னல்களிலும் 1 லட்சம் வாகன ஒட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து விழிப்புணர்வு ஆண்டு-2023

2023ம் ஆண்டை போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசும் வகுத்துள்ளது. அரசின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க, மக்கள் எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை இந்த பிரசாரம் வலியுறுத்துகிறது. இதன் விளைவாக தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Related Stories: