பலம் வாய்ந்த வேட்பாளர் இல்லாததால் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜ போட்டியில்லை: அண்ணாமலை சூசக தகவல்

திருச்சி: ‘பலம் வாய்ந்த வேட்பாளர் இல்லாததால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடவில்லை’ என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: கூட்டணி என்பது மரபு தர்மத்திற்குட்பட்டது. கூட்டணி தர்மத்தோடு நடைபெறுவது கண்ணியமாக இருக்கும். திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர்த்து போட்டியிடும் கட்சி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி நிறுத்தப்படும் வேட்பாளர் மக்கள் செல்வாக்கு பெற்றவராக, மக்களின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும். ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். பாஜவில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி. ஈரோட்டில் போட்டியிட்டு அதிமுக சார்பாக ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதிமுக விருப்ப மனுக்களை கொடுக்க தெரிவித்துள்ளது. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்தித்துள்ளார். நிற்ககூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும். இடைத்தேர்தல் கட்சிக்கு பலப்பரீட்சை கிடையாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தோற்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். போட்டி பொறாமை என்பது கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 13 மாதங்களில் வரப்போகிறது. நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும். வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவரே மனவருத்தத்தில் உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளதன் மூலம், பாஜ சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட மாட்டார் என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில், இந்த இடைத்தேர்தலில் பாஜ சார்பில் வேட்பாளர் நிறுத்தி தோற்றால், மதிப்பு குறைவதுடன் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், பாஜ சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததாலும் பாஜ மேலிடமும், அண்ணாமலையும் அஞ்சுகின்றனர். இதன் வெளிப்பாடாக அண்ணாமலையின் பேட்டி அமைந்து உள்ளது.

Related Stories: