சர்வதேச அளவில் நடைபெறும் பளு தூக்கும் போட்டியில் தங்கம்: அரசு பள்ளி மாணவன் சாதனை

இன்றைய விஞ்ஞான உலகில் சமூக வலைதளங்கள், ஆன்லைனில் வரும் புதுப்புது விளையாட்டுகள் என பொழுதுபோக்கில் மூழ்கி, ஏராளமான மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு, வாழ்க்கையை தொலைக்கின்றனர். மேலும் சிலர் தீய பழக்க வழக்கங்களால் எதிர்காலத்தை பாழாக்கி வரும் நிலையில், அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவர் தீவிர முயற்சியினால், தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த லோகநாதன்-மேனகா தம்பதிக்கு, யமுனா (18) என்ற மகளும், தனுஷ் (16) என்ற மகனும் உள்ளனர். கார்பென்டரான லோகநாதன் சிறு வயதில் பளு தூக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், வறுமை காரணமாக, அதை தொடர முடியவில்லை.இதனால், தனது குழந்தைகளை எப்படியாவது இதில் சாதிக்க வைக்க வேண்டும் என கருதி, மகள் யமுனா, மகன் தனுஷ் ஆகிய இருவருக்கும் பளு தூக்கும் போட்டிக்கு முறையாக பயிற்சி அளித்து வந்துள்ளார். தற்போது, திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் தனுஷ், பளு தூக்குவதில் சாதனை படைக்க வேண்டும், தந்தையின் கனவை நனவாக்க வேண்டும் என்று தீவிர பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு 49 கிலோ எடை பிரிவில் கோவில்பட்டி மற்றும் கரூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதேபோல், தேசிய அளவில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும், ஹரியானாவில் நடைபெற்ற கேல் இன்டியா போட்டியிலும் முதல் முறையாக பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.வரும் பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ள கேல் இந்தியா போட்டியில் 2வது முறையாக பங்கேற்று சாதனை படைப்பேன் என்ற தனுஷ், விரைவில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் உலக சாதனை படைத்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே லட்சியம் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசமி கூறுகையில், ‘‘மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த மாணவன் எங்கள் பள்ளியில் பயில்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில், 10ம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும் என்பதால் படிப்பிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தி வருகிறோம் என்றார். மாணவனின் தந்தை லோகநாதன் கூறுகையில், ‘‘பள்ளி தலைமை ஆசிரியரின் ஊக்கம் காரணமாகவே எனது மகன் உலக அளவிலான போட்டி வரை சாதனை படைக்க முடிந்தது. நடைபெற உள்ள உலக அளவிலான போட்டியில் பங்கேற்க அரசு நிதியுதவி அளித்தால் உதவியாக இருக்கும்,’’ என்றார்.

Related Stories: