சென்னையில் செல்போனை பறிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து இழுத்து வாலிபரை கொன்ற பயங்கரம்

சென்னை: செல்போனுக்காக, ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் கீழே இழுத்து  கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம், ஹவுராவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று முன்தினம் மாலை  சென்று கொண்டிருந்தது. கொருக்குப்பேட்டை - சீனிவாசபுரம் இடையே சிக்னலுக்காக ரயில்கள் வழக்கமாக மெதுவாக செல்லும். அதன்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் அப்பகுதியில் மெதுவாக சென்று கொண்டு இருந்தது.அப்போது, இந்த ரயிலின் எஸ்-4 பெட்டியில் பயணிகள் சிலர் கதவு அருகே நின்றபடி செல்போனில் வீடியோ பார்த்தபடி இருந்தனர்.

இதில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ரோனி சேட் (24) என்பவர், கதவின் அருகே அமர்ந்தபடி, தனது ஸ்மார்ட் போனை பார்த்தபடி வந்துள்ளார். அப்போது, தண்டவாளம் அருகே கீழே நின்று கொண்டு இருந்த ஒரு மர்ம நபர், திடீரென ரோனி சேட்டின் செல்போனை தாவி பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோனி சேட், தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அலறி கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கொள்ளையன், ரோனி சேட் கையை பிடித்து இழுத்ததில் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் ரோனி சேட் துடிதுடித்தார். உடனே அந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பினான்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரோனி சேட்டை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரோனி சேட் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பலியான ரோனி சேட் மேற்குவங்க மாநிலம் சாந்த்ராகாச்சி பகுதியில் இருந்து சென்னையில் கட்டிட தொழிலாளியாக ேவலை பார்க்க வந்தது தெரிந்தது.

இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செல்போன் பறிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையன் சிக்கினான்: ரயில்வே போலீசார் விசாரணையில், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (எ) கரா (19), விஜய் (எ) வெள்ளை (19) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து கொருக்குப்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பு சம்பவம் நடந்து வருவதால் இதனை தடுக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

Related Stories: