கே.வி.குப்பம் பகுதிகளில் சாலை ஓரமாக மூட்டைகளில் இறைச்சி கழிவு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு: துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

கே.வி‌.குப்பம்: கே.வி.குப்பம் பகுதிகளில் சாலை ஓரமாக மூட்டை மூட்டையாக கோழி இறைச்சி கழிவுகள் கொட்டி உள்ளதால், அங்கு புழுக்கள், பூச்சிகள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்  ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு இறக்கும் கோழிகளின் கழிவுகளை  வெளியில் கொண்டு சென்று கொட்டாமல், சாலையின் இருபுறமும் மூட்டைகளாக கட்டி விட்டு கொட்டி விடுகின்றனர்.மேலும் நோயால்  பாதிக்கப்பட்டு இறக்கும் இறைச்சி கோழிகளை  சாலையோரம் ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனர்.

இதனால், கோழிக் கழிவுகளில் புழுக்கள், பூச்சிகள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது.  குறிப்பாக கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட லத்தேரி - பரதராமி சாலையில், லத்தேரி, காளம்பட்டு, காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் விக்ரமாசிமேடு, வேப்பங்கனேரி, கொசவன் புதூர் உட்பட  பல்வேறு பகுதிகளில் தினமும் சாலையோரமாக  கோழி கழிவுகளை  ஆள் நடமாட்டம் இல்லா  நேரத்தில் கொட்டி விடுகின்றனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமின்றி தினமும் மேற்கண்ட வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  மேலும் இச்சாலைகளில்  வழியாக ஆந்திர மாநிலத்திற்கு 15 நிமிடங்களிலேயே செல்லக்கூடும்.

அதுமட்டுமின்றி தமிழக -ஆந்திரா எல்லை, போக்குவரத்து சோதனை சாவடி மையம், வனச்சோதனை சாவடி மையம், காவல் நிலையங்கள், சுகாதார நிலையங்கள், கால்நடை மையங்கள், விஏஓ அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிகள், ரேஷன் கடைகள், கோயில்கள், தனியார் மண்டபங்கள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளன.  மக்கள் செல்லும் இவ்வழியில் மர்ம நபர்கள் சிலர் கோழி கழிவுகளை மூட்டைகளில் கட்டி சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் தூர் நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும்  அவ்வழியாக நடந்தே செல்லும் பெண்கள், மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள், என பலதரப்பட்ட மக்கள் அவதியடைகின்றனர். எனவே இதுகுறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும், என்றும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: