மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகள் தானம்; விசாகப்பட்டினத்தில் இருந்து விமானத்தில் பறந்த இருதயம்: சிறுவனுக்கு பொருத்தி வாழ்வு அளித்த டாக்டர்கள்

திருமலை: விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு கொண்டு வரப்பட்ட இருதயம் 15 வயது சிறுவனுக்கு பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குழந்தைகளுக்கான  இருதய சிகிச்சைக்காக கடந்தாண்டு பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனை தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னமையா மாவட்டம் சிட்வேலுவை சேர்ந்த நரசய்யா-ராதம்மா தம்பதியரின்  15 வயது மகன் விஸ்வேஸ்வரய்யாவுக்கு இருதயம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் பத்மாவதி இருதய மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு இருதயம் மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஆனந்தன், அவரது மனைவி மஜஞ்சுரு சன்யாசம்மா ஆகியோர் சங்கராந்தி(பொங்கல்) பண்டிகையன்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். விசாகப்பட்டினம் விமான நிலையம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தனர்.

இதில், மஜஞ்சுரு சன்யாசம்மா கடந்த 16ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதித்தனர். இதில் மஜஞ்சுரு சன்யாசம்மாவின் இருதயத்தை அன்னமையா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் விஸ்வேஸ்வரய்யாவுக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான இருதய மருத்துவமனை மருத்துவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். நேற்று போலீசார் உதவியுடன் மஜஞ்சுரு சன்யாசம்மாவின் இருதயம் திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனைக்கு  கொண்டு வரப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் மருத்துவர்கள் குழுவினர் இருதயத்தை பாதுகாப்பாக திருப்பதி சர்வதேச ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு 30 நிமிடங்களில் கொண்டு வந்தனர். இதையடுத்து எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின்பேரில் டிஎஸ்பி காட்டம்ராஜூ தலைமையில் இருதயம் கொண்டு செல்லக்கூடிய 108 ஆம்புலன்ஸ் செல்லும் வழி முழுவதும் போக்குவரத்து பாதிக்காத வகையில் கிரீன் சேனல் வழித்தடம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரம் ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் மருத்துவமனைக்கு 20 நிமிடத்தில் இருதயம் கொண்டு வரப்பட்டது.

மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் இருந்ததால் உடனடியாக விஸ்வேஸ்வரய்யாவிற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை தொடங்கினர். இதன் மூலம் சிறுவனுக்கு டாக்டர்கள் புது வாழ்வு அளித்துள்ளனர். ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், முதன்முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: