சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டி: மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒப்புதல்

சேலம்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சை சின்னத்தில் களமிறங்க இபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்களும்,  முக்கிய நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, கடந்த 4ம்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்தமாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில், மீண்டும் காங்கிரசுக்கே ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவோ, முன்பு வாய்ப்பளித்த தமாகாவை ஒதுக்கி விட்டு, தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, ஏற்கனவே இபிஎஸ் அணியை சேர்ந்த ஜெயக்குமார், வளர்மதி, கோகுலஇந்திரா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசியுள்ளனர். அதிமுகவின் கோரிக்கைக்கு, வாசனும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சேலத்தில் முகாமிட்டுள்ள அதிமுகவின் இடைக்கால  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து, முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில், நேற்று (20ம்தேதி)  முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, கருப்பணன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் ஈரோடு மாவட்டத்தை ேசர்ந்த முக்கிய நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ஓபிஎஸ்சுடன் சமரசம் செய்து கொள்ளாமல், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு, தனது செல்வாக்கை காட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த தேர்தலில் அதிமுக, பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால், தற்போது இபிஎஸ் தலைமையில் இருப்பது உண்மையான அதிமுகவா? அல்லது ஓபிஎஸ் தலைமையில் இருப்பது உண்மையான அதிமுகவா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தொடரப்பட்ட வழக்குகளும், புகார்களும் நிலுவையில் உள்ளது. இதனால், கண்டிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை.

அதே நேரத்தில் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் சமரசம் செய்து கொண்டால், சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், எந்த நிலையிலும் ஓபிஎஸ்சுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு, தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக உள்ளது.

இந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இபிஎஸ் தலைமையிலான அதிமுக சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர். முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக களமிறங்கவும் அதிக வாய்ப்புள்ளது,’’ என்று தெரிவித்தனர்.

* கும்பிடு போட்டு சென்ற மாஜிக்கள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக, செய்தி சேகரிக்க ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள்,  நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் குவிந்தனர். ஆனால், எடப்பாடியின் ஆதரவாளர்களும், பாதுகாப்பு படையினரும் இங்கே யாரும் வரக்கூடாது. உங்களை யாரும் அழைக்கவில்லை. அதனால் அனுமதிக்க முடியாது என்று விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சுமார் 3 மணி நேர ஆலோசனைக்கு பிறகு, வெளியே வந்த முன்னாள் அமைச்சர்கள், யாரிடமும் எதுவும் பேசாமல், செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டவாறு அங்கிருந்து சென்றனர்.

Related Stories: