அரசு விதிமுறைகளை பின்பற்றாததால் கொசவபட்டி ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தம்: காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்

கோபால்பட்டி: திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி 21 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித உத்திரிய மாதா கோயிலில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.  எஸ்பி பாஸ்கரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.  உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 500 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தன. சில காளைகளை, வீரர்கள் லாவகமாக பிடித்து பரிசுகளை அள்ளினர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர். பிடிபடாத காளைகள் மற்றும் காளைகளை பிடித்த வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, குடம், சீலிங்பேன், குத்து விளக்கு, குக்கர் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கொசவபட்டி  ஜல்லிக்கட்டு வழக்கமாக மாலையில் நிறைவு பெறும் நிலையில் நேற்று மதியமே  நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் விதித்த விதிமுறைகளை  முறையாக பின்பற்றாமல் நடத்தியதால், ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டதாக எஸ்பி  பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி மதியமே  நிறுத்தப்பட்டதால் சுமார் 200 காளைகளை அவிழ்த்து விட முடியாமல் போனது.

Related Stories: