சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை சிபிசிஐடியிடம் தாய் ஒப்படைத்தார்

விழுப்புரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்தியதாக  கூறப்படும் செல்போனை விழுப்புரம் சிபிசிஐடி போலீசாரிடம் அவரது தாய்  ஒப்படைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர்  தனியார் பள்ளி 12ம்வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக மிகப்பெரிய  கலவரம் வெடித்தது. பள்ளிகள் சூறையாடப்பட்டன. கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு  போலீசாரும், மாணவி மரணம் தொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசாரும்  தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாணவியின் பெற்றோர்  ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிசிஐடி போலீசார்  விசாரணைக்காக ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை தங்களிடம் ஒப்படைக்குமாறு  ஏற்கனவே 4 முறை சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர்  ஒப்படைக்கவில்லை. இதனால் விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சிபிசிஐடி  போலீசார் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்நிலையில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது ஸ்ரீமதி பயன்படுத்திய  செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிபதி கடந்த டிசம்பர்  15ம் தேதி உத்தரவிட்டிருந்தார். தற்போது பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் இந்த  வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், நேற்றையதினம் ஸ்ரீமதியின்  தாய் செல்வி,  செல்போனை ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு  வழக்கறிஞர்களுடன் வந்திருந்தார். பின்னர் தலைமை குற்றவியல் நீதிபதி  புஷ்பராணியிடம் இந்த செல்போனை ஒப்படைக்க சென்றபோது  நீதிபதி வாங்க மறுத்து விட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில், விசாரணை  அதிகாரியிடம்தான் செல்போனை ஒப்படைக்க வேண்டும். விழுப்புரம் கோர்ட்டில் அல்ல  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம்  செல்போனை ஒப்படைத்து, போலீசார் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை ரசீதை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து  ஸ்ரீமதியின் தாய் செல்வி விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி  காவல்நிலையத்தில் விசாரணை அதிகாரியிடம் இந்த செல்போனை  ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

Related Stories: