கடந்த ஆட்சியில் இழந்த பெருமைகளை திமுக ஆட்சி மீட்கிறது இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி: விளையாட்டு மேம்பாட்டு அணி நேர்காணலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளராக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாள் நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர்கள் கவுதம் சிகாமணி மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று நிர்வாகிகளை நேர்காணல் செய்தனர். அப்போது, எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘. 76 வயது முதியவர் ஒருவர் நேர்காணலுக்கு வந்தார், அவரிடம், இவ்வளவு வயதாகி உள்ள நிலையில் ஏன் வந்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், இந்த அணிக்காக நான் செயல்பட வேண்டும் என சொன்னார். திமுக மீது தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்பதை இது காட்டுகிறது’’ என்றார்.

 தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினரை முதல்வர் பொறுப்பாளராக நியமித்துள்ளார். இந்த அணியில் பொறுப்புக்கு வரும் நிர்வாகிகள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த அணி சார்பில் எவ்வளவு வாக்குகளை பெற்று தருகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒரு பூத்துக்கு ஒரு கிரிக்கெட் அணியை நாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 7 லட்சம் பேரை திமுகவில் இணைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்க முடியும். திமுகவுக்கு 23 அணிகள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு அணியும் 50 லட்சம் வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைத்தால், திமுகவை யாராலும் அசைக்க முடியாது, திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியை செய்ய வேண்டும்.

இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி பெருமை சேர்த்துள்ளார் முதல்வர். அதேபோன்று, உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 100 சதவீதம் திமுக தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிற வேட்பாளர்கள் 39 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று டெல்லிக்கு செல்வார்கள். தமிழகத்தின் உரிமையை மீட்கக் கூடிய வகையில் நிச்சயமாக அவர்கள் பணிகள் அமையும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறுவது உறுதி. அதிமுகவை எதிர்த்து எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். முதல்வர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்கக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: