புதுக்கோட்டை அருகே விபத்தில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை கண்ணீர் மல்க அடக்கம்

விராலிமலை: புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று திரும்பியபோது சாலை விபத்தில் உயிரிழந்த காளையை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன் விடுதியில் கடந்த 17ம்தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் விராலிமலையை சேர்ந்த சின்னராசு என்பவரது வெள்ளை காளை பங்கேற்றது. இதில் போட்டிகள் முடிந்த பிறகு அன்று மாலை லோடு ஆட்டோவில் காளையை ஏற்றிக்கொண்டு காளை உரிமையாளர் விராலிமலைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

திருவரங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. இதில் வெள்ளை காளையுடன் ஆட்டோவில் பயணித்த மேலும் இரண்டு காளைகள், ஆட்டோவில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய வெள்ளை காளை, ஒரத்தநாடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காளை நேற்று உயிரிழந்தது.

இதையடுத்து விராலிமலைக்கு கொண்டுவரப்பட்ட இறந்த காளையின் உடலை, உரிமையாளரான சின்னராசு அவரது இல்லத்தில் குழி தோண்டி மாலை மரியாதையுடன் பால் ஊற்றி கண்ணீர் மல்க அடக்கம் செய்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பங்கேற்று காளையின் இறப்பை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

Related Stories: