பழநி கோயிலில் தைப்பூச திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்: பிப். 4ல் தேரோட்டம்

பழநி: பழநி கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். இத்திருவிழாவிற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கி விட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா வரும் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி - தெய்வானை சமேதராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் பிப். 3ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளை உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்ட நிகழ்ச்சி பிப். 4ம் தேதி நடக்க உள்ளது. அன்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப். 7ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தங்கத்தேர் புறப்பாடு இல்லை

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிப். 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாதென கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பம்

பழநி கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது முழுவீச்சில் இறுதிகட்ட வண்ணம் பூசும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று ஓதுவார்களால் திருமுறை பண்ணிசை விண்ணப்பம், விநாயகர் அகவல், விநாயகர் கவசம் மூத்த பிள்ளையார் முதல்நிலை வேள்வி, 16 வகை திருநாம வேள்வி, எண்வித பொருட்கள் அவி சொரிதல், 16 மறை ஞானச்சிறுவர்கள் வழிபாடு,

எண் திரவிய ஆகுதி, பட்டாடை ஆகுதி, நிறைவேள்வி, நறும்புகை, விளக்கு படையல், திருவொளி வழிபாடு, ஆனந்த விநாயகருக்கு வேள்விகலவ புனித நீர் திருமஞ்சனமாட்டுதல், அலங்கரித்தல், அருகம்புல் அர்ச்சனை, திருவமுது படைத்தல், பேரொளி வழிபாடு போன்றவை நடந்தது. கும்பாபிஷேகம் நடைபெறும் 27ம் தேதி வரை நாள்தோறும் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும், கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தல் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related Stories: